பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

டால்ஸ்டாய் கதைகள்

வேளையில் பழைய கைதிகள் புதிய ஆசாமிகளைச் சூழ்ந்து கொண்டு, யார் யார் எந்த எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள், என்ன காரணத்திற்காகத் தண்டனை பெற்றுள்ளார்கள் என்றெல்லாம் விசாரித்தார்கள். மற்றவர்களோடுகூடி அக்ஸனோவும் புதிதாக வந்தவர்களுக்கு அருகே உட்கார்ந்திருந்தான். அவன் உற்சாகமற்ற முறையிலேயே அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான்.

புதிய குற்றவாளிகளில், திடகாத்திரமான நெட்டையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அறுபது வயது இருக்கும். ஒட்ட வெட்டி விடப்பட்ட தாடி வைத்திருந்தான் அவன். தான் எதற்காகக் கைது செய்யப்பட்டான் என்பதைப்பற்றி அவன் பேசிக் கொண்டிருந்தான்.

“சறுக்கு வண்டியில் கட்டியிருந்த ஒரு குதிரையை நான் ஓட்டிச் சென்றேன். அதற்காக என்னைப் பிடித்துக் கொண்டார்கள். திருட்டுப் பட்டமும் கட்டி விட்டார்கள். நான் சொன்னேன்—வீட்டுக்கு விரைவாகப் போய்ச் சேர வேண்டுமே என்றுதான் நான் இந்தக் குதிரையை அவிழ்த்தேன். அப்புறம் இதை அதன் போக்கிலே விட்டுவிட எண்ணியிருந்தேன். மேலும், அந்த வண்டிக்காரன் எனது நெருங்கிய நண்பன் ஆவான். ஆகையினாலே, இதில் தவறு ஒன்றும் கிடையாது என்றேன். ‘இல்லை, நீ திருடத்தான் செய்தாய்’ என்கிறார்கள் மற்றவர்கள். ஆனால், நான் எங்கே திருடினேன், எப்படித் திருடினேன் என்பது எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒருசமயம் உண்மையாகவே நான் தவறான ஒரு காரியத்தைச் செய்தேன். நியாயமாகப் பார்த்தால் ரொம்ப