பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

டால்ஸ்டாய் கதைகள்

அரங்கிலே ஊசலிட்டன. அவனுடைய மனைவியின் உருவம், அவன் சந்தைக்குப் புறப்பட்ட சமயத்தில் விட்டுப் பிரிந்தபோது காட்சி தந்து நின்ற நிலையில், இப்பொழுதும் தோன்றியது. கண் முன்னால் அவளே நிற்பதுபோல் தோன்றியது அவனுக்கு. அவள் முகமும், அவளுடைய கண்களும் மிகத் தெளிவாகப் புலனாயின. அவள் பேசுவதையும் சிரிப்பதையும் அவன் கேட்டான். அப்புறம், அவன் தனது குழந்தைகளைக் கண்டான். அந்தக் காலத்தில் இருந்தது போல், சின்னஞ் சிறுசுகளாய் கண்டான். ஒன்று சிறு சட்டை அணிந்திருந்தது. மற்றொன்று அம்மாவின் மார்பில் முகம் புதைந்திருந்தது. அதற்குப் பிறகு அவன் தன்னையே, முன்பு தான் இருந்தது போல வாலிபமும் உற்சாகமும் நிறைந்த தோற்றத்தில் கண்டான். கைது செய்யப்படுவதற்கு முன்பு விடுதியின் முற்றத்தில் அமர்ந்து இசைக் கருவியை மீட்டிக் கொண்டு தான் பாடியிருந்த நிலையை எண்ணிப் பார்த்தான் அவன். அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் அவன், கவலை என்பதையே அறியாதவனாக! தான் கசையடி பட்ட விதத்தையும், தண்டனை கொடுத்தவனையும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஜனத்திரளையும் அவன் மனத்திரையிலே கண்டான். விலங்குகளையும், குற்றவாளிகளையும், இருபத்தாறு வருடச் சிறை வாழ்க்கையையும், அகாலத்திலேயே வந்துவிட்ட மூப்பையும் பற்றி நினைத்தான் அவன். அந்த எண்ணமெல்லாம் அவனுக்கு வேதனையே தந்தது. தன்னைத் தானே அழித்துவிடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு வெறுப்பு ஏற்படுத்தியது.