பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

9



‘உனக்கு இஷ்டம் இல்லையானால் நீ மேலும் குடிக்க வேண்டியதில்லை. ஆனால் அப்புறம் தண்ணீர் வேணும் என்று கேட்கப்படாது’ என்று கண்டிப்பாகச் சொன்னான் நிகிட்டா. இவ்விதம் தனது பண்பை முக்கார்ட்டிக்கு விளக்கிக் காட்டிய பிறகு அவன் லாயத்துக்குத் திரும்பினான். முற்றத்தில் நெடுகிலும் துள்ளி விளையாடத் துடித்த இளம் குதிரையை கடிவாள வாரினால் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் அவன்.

முற்றத்தில் அந்நியன் ஒருவன் தவிர வேறு யாரும் காணப்படவில்லை. சமையல் காரியின் கணவன் அவன், பண்டிகைக்காக அங்கு வந்திருந்தான்.

‘போய், எந்தச் சறுக்கு வண்டியில் குதிரையை பூட்ட வேண்டும் என்று கேளு. அகலமான வண்டியிலா, சின்ன வண்டியிலா என்று தெரிந்து வா. போ ஐயா, நீ ரொம்ப நல்லவனாச்சுதே’ என்றான் நிகிட்டா.

சமையல்காரியின் கணவன் வீட்டுக்குள்ளே போனான். இரும்பினால் அஸ்திவாரம் இடப்பெற்று, தகரக்கூரை அமைக்கப்பட்டு உறுதியாக விளங்கியது அந்த வீடு. அவன் சீக்கிரமே திரும்பி வந்து, சின்ன வண்டிதான் தயாராக வேண்டும் என்று அறிவித்தான்.

அதற்குள் நிகிட்டா கழுத்துப் பட்டையையும் பித்தளை பொதிந்த வயிற்றுப் பட்டையையும் குதிரைக்கு அணிவித்து விட்டான். வர்ணம் பூசப் பெற்றிருந்த, லேசான ஏர்க்கால் சட்டம் ஒன்றை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறுகையால் குதிரையைப் பற்றி வண்டிகள் நின்ற இடத்துக்கு நடத்திச் சென்றான்.