22
டால்ஸ்டாய் கதைகள்
‘அது அவர்களுடைய விவகாரம், வாஸிலி ஆன்ட்ரீவிச், அவர்கள் காரியங்களில் நான் தலையிடுவதில்லை. எங்கள் பையனை அவள் கொடுமைப்படுத்தாமல் இருக்கிற வரையில்–ஆண்டவன் அவர்களுக்கு அருள் புரியட்டும்’ என்றான் நிகிட்டா.
‘அது சரிதான்’ என்று சொன்ன. வாஸிலி பேச்சை மாற்றினான். ‘கோடைகாலச் சந்தையில் நீ குதிரை வாங்கப் போகிறாயா?’ என்று கேட்டான்.
'ஆமாம். நான் வாங்கித்தானே ஆகவேண்டும் என்று நிகிட்டா பதிலளித்தான். அவன் தனது கழுத்துக் காலரைத் தணித்து மடக்கி விட்டான். பின்னால் எஜமான் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்தான். வரவர பேச்சு அவனுக்கும் சுவாரஸ்யமானதாகி விட்டது. அதனால் ஒரு வார்த்தையைக்கூட நழுவவிட விரும்பவில்லை அவன்.
‘பையன் பெரியவனாக வளர்ந்து வருகிறான். அவனே உழுது பழக வேண்டியதுதான். இதுவரை நாங்கள் வேறொரு ஆளைக் கூலிக்கு அமர்த்தவேண்டிய அவசியம் இருந்தது’ என்றான் அவன்.
‘அப்படியானால், என்னிடம் மெலிந்து ஒடுங்கிப் போன குதிரை ஒன்று இருக்கிறதே, அதை நீ ஏன் வாங்கிக் கொள்ளக்கூடாது? அதற்காக நான் உன்னிடம் அதிகமான விலை எதுவும் கேட்கப் போவதில்லை’ என்று வாஸிலி பலத்த குரலில் அறிவித்தான். அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டிருந்தது. குதிரை வியாபாரம் தான் அவனுக்குப் பிடித்தமான தொழில். அவனது மனோபலம் பூராவும் சதா இந்த விஷயத்திலேயே செலவாகி வந்தது.