பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

மகத்தான இலக்கியங்களை சிருஷ்டித்து, உயர்வடைந்தவர்களில் ரஷ்ய மேதை டால்ஸ்டாயும் ஒருவர். இலக்கிய வானில் குன்றாத ஒளி வீசித் திகழும் தனிப் பெரும் நட்சத்திரம் அவர். செல்வ போகங்கள் நிறைந்த உயர்குடியில் பிறந்தவர் அவர். செல்வ வளமும் வாலிபமும் வாழ்க்கையில் பெற்றுத்தரக் கூடிய சகல சுகங்களையும் அனுபவித்து உல்லாசமாக வாழ்ந்தார். உணர்ச்சிகள் ஆட்டி வைத்த வழியில் கண்மூடித்தனமாகச் சென்று கொண்டிருந்த அவருக்கு அறிவின் விழிப்பு ஏற்பட்டது. தான் வாழ்கிற முறை சரியானது அல்ல என்று உணர்ந்தார் அவர். தன்னைச் சுற்றிலும் வசிக்கிறவர்களும் பிறரும்—மனித வர்க்கத்தில் பெரும் பலரும்—வாழ்கிற முறை ஒழுங்கானது அல்ல என்று கண்டார். மனித குணங்களைப் பற்றி, மனித வாழ்வின் தன்மைகள் தவறுகளைப் பற்றி, வாழ்வின் உயர்வுக்கான வழிகளை எல்லாம் பற்றி, அவர் சிந்தித்தார். தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் அவர் கட்டுரைகளாகவும், நல்ல கதைகளாகவும். சிறந்த நாவல்களாகவும் உருவாக்கிக் குவித்தார். நல்வாழ்வு வாழ்வதற்கு ஏற்ற வழிகள் எனத் தான் உணர்ந்த உண்மைகளைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பதற்காக அவர் தனது வாழ்நாளில் பல முயற்சிகள் செய்தார். அவரது வாழ்க்கை முறைகளினாலும் சிந்தனைக் கருத்துகளினாலும் வசீகரிக்கப்பட்டவர்களில் மகாத்மா காந்திஜீயும் ஒருவர். டால்ஸ்டாயைத் தனது குருவாக மதித்தார் காந்திஜி என்பது குறிப்பிடத் தகுந்தது.

உண்மையின் உயர்வு, எளிய வாழ்வு, தெய்வ நம்பிக்கை, மனித அபிமானம், பரோபகாரச் சிறப்பு போன்ற கருத்துக்களை வலியுறுத்துவதற்காகவே டால்ஸ்டாய் பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார். என்றாலும், அருடைய கதைகள் வெறும் உபதேசக் கதைகள் மாதிரி சாரமற்றவை அல்ல. எளிமையும் இனிமையும் கதைச் சுவையும் நிறைந்த இலக்கியப் படையல்கள் அவை.