பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

59


‘நீ தயார் என்றால், நாங்கள் கிளம்ப வேண்டியது தான்’ என்று வாஸிலி சொன்னான், ‘பாகப் பிரிவினை விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது தாத்தா. எல்லாவற்றையும் நீங்கள் தானே சேர்த்து வைத்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் தான் எஜமான். அவசியமானால், சமாதான நீதிபதியிடம் போங்கள். இந்த விவகாரங்கள் எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி அவர் அறிவிப்பார்’ என்றான்.

‘இவன் ஒரே சாதனையாக இருக்கிறான். பிடிவாதமாக இருக்கிறானே. இவனிடம் எதுவும் எடுபடாது. சைத்தான்தான் இவனைப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைக்கிறான்’ என்று கிழவன் ஒப்பாரிக் குரலில் ஓலமிட்டான்.

இதற்குள் நிகிட்டா ஐந்தாவது தம்ளர் தேநீரைப் பருகிவிட்டு, கிளாசைத் தலைகீழாகக் கவிழ்த்து வைக்காமல் நேராகவே வைத்தான். ஆறாவது தம்ளர் தேநீர் தனக்குக் கிடைக்கும் என்று அவன் நம்பினான். ஆனால் ஸமோவாரில் மேற்கொண்டு தண்ணீர் இல்லை. அதனால் குடும்பத் தலைவி அவனுக்காக மீண்டும் தேநீர் நிரப்பவில்லை. மேலும், வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது உடுப்புகளை அணிந்து கொண்டிருந்தான். உடனே கிளம்புவதைத் தவிர நிகிட்டாவுக்கு வேறு வழியில்லை. சுற்றிலும் சிறுகச் சிறுகக் கடித்திருந்த சர்க்கரைக் கட்டியை மறுபடியும் கிண்ணத்தில் போட்டான் அவன். வேர்வை வழியும் முகத்தை ஆட்டுத்தோல் கோட்டின் விளிம்பினால் துடைத்துவிட்டு அவன் தனது மேல் அங்கியை அணிந்து கொள்ளச் சென்றான்.