பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டால்ஸ்டாய் கதைகள்

முன்னால் குதித்தது. ஆனால் அவ்வளவு பலம் அதற்கு இல்லை. அதனால் அது தோள்பட்டை வரை பனியில் ஆழ்ந்து விட்டது.

‘வெளியே வாருங்கள்!’ என்று. வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்த வாஸிலியை நோக்கி, நிகிட்டா சொன்னான். ஒரு பக்கத்துச் சட்டத்தைத் தூக்கிப்பற்றி வண்டியை குதிரையோடு சேர்த்துப் பிடித்தான்.

‘சிரமம்தான் தம்பி. ஆனால் தவிர்ப்பதற்கு இல்லையே, முயற்சி பண்ணிப் பாரு!’ என்று முக்கார்ட்டிக்கு உபதேசித்தான் அவன். ‘ஊம், ஊம், ஒரு சிறு முயற்சி!’ என்று கத்தினான்.

குதிரை ஒரு முறை பலமாக இழுத்தது. மறுபடியும் இழுத்தது. ஆனால் அது தன்னை வெளியே இழுத்துக்கொள்ள இயலவில்லை. ஆகவே, எதைப் பற்றியோ ஆலோசிப்பது போல அது அசையாமல் நின்றுவிட்டது.

‘இப்ப இது சரிப்படாது தம்பி! திரும்பவும் முயற்சி பண்ணு!’ என்று உபதேசித்தான் நிகிட்டா. தனது பக்கத்தில் உள்ள சட்டத்தைப் பற்றி வலிந்து இழுத்தான் அவன்.

அதே விதமாக வாஸிலி தனது பக்கத்தில் செயல் புரிந்தான். முக்கார்ட்டி தன் தலையை உயர்த்திக் கொண்டு சடாரென்று ஒரு இழுப்பு இழுத்தது.

‘அப்படித்தான்! அப்படித்தான்! பயப்படாதே. நீ மூழ்கிவிட மாட்டாய்’ என்று நிகிட்டா உற்சாகப்படுத்தினான்.