பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

89

இது போல் கழித்தது உண்டு. எல்லாம் சரியாகவோ முடிந்தது’ என்று அவன் நினைத்தான். ஆனால் வேறொரு விஷயமும் உடனேயே அவன் நினைவில் எழுந்தது. ‘செபஸ்டியனைத் தோண்டி எடுத்த போது அவன் செத்துப் போயிருந்தான்—ஒரே விறைப்பாக, பனியில் உறைந்த சவம் மாதிரி. நான் மட்டும் கிரிஷ்கினோவில் தங்கி இரவைப் போக்கியிருந்தால் இதெல்லாம் ஏற்பட்டே இருக்காது!’

அவன் சிரத்தையோடு தனது கோட்டை இழுத்துச் சுற்றிக் கொண்டான். ரோமச் சட்டையின் உஷ்ணம் கொஞ்சம் கூட வீணாகிவிடக் கூடாது; தன் உடம்பு முழுவதும், கழுத்து, முழங்கால், பாதங்கள் எங்கும் கதகதப்பு ஏற்படுத்த வேண்டும் என்று அவன் சிரமப்பட்டான். பிறகு கண்களை மூடிக்கொண்டு தூங்குவதற்கு முயற்சி செய்தான். ஆனால் என்னதான் முயன்ற போதிலும் அவனால் தூக்கக் கிரக்கம் பெற முடியவேயில்லை. அதற்கு மாறாக விழிப்பும் உணர்ச்சிக் குறுகுறுப்புமே அதிகம் பெற்றான் அவன். மறுபடியும் அவன் தனது லாபங்களையும் தனக்குச் சேரவேண்டிய கடன்களையும் கணக்குப் பண்ணத் தொடங்கினான். மீண்டும் தனக்குத் தானே வீண் பெருமை பேசிக்கொள்ள ஆரம்பித்தான். தன்னைப் பற்றியும், தனது அந்தஸ்து பற்றியும் மிகுந்த திருப்தி அடைந்தான் அவன். ஆயினும், ரகசியமாக நெருங்கி வந்து கொண்டிருந்த ஒரு பயத்தினாலும், கிரிஷ்கினோவில் தங்காமல் போனோமே என்ற நினைப்பு தந்த கசப்பான வருத்தத்தினாலும் இவை எல்லாம் அடிக்கடி கலைக்கப்பட்டுவந்தன.