பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தகடூர் யாத்திரை



எனினும், இப்படிச் சிதறிக்கிடந்த சிறுசிறு நாடுகள் ஒவ்வொன்றுமே வீரத்திருவுடையார் பலரைப் பெற்றிருந்த் தனால், ஒருவகையில் தமிழகத்தின் பொதுவான ஒருமை வளர்ச்சிக்கும், உலகுபோற்றும் வலிமைக்கும் அந்த அமைதி பழுதாகவும் இருந்திருக்கிறது. ஒருவருக்கொருவர் இவர்களே தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர் என்பதனால், தமிழரின் வீரத்தன்மை வெளிப்பட்ட தாயினும், ஒற்றுமைமட்டும் இவர்களுக்குள் இருந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நன்மைகள் பலவும் ஏற்படாமற்போய்விட்டன என்பதும் உண்மையாகும்.

மேலரசுகள், சில சமயங்களில் இந்தக் குறுநில மன்னர்களை அடக்குவதற்கு இயலாமல் வலியிழந்து போயிருந்த காலமும் உண்டு. அவ்வேளையில், குறுநில மன்னர்கள் தத்தம் மேலரசுகளை மதியாது, தம்முடைய வெற்றிப் பெருமிதத்தைப் பரப்புவதற்கு முயன்றும் வந்திருக்கின்றனர்.

இவ்வாறான ஒரு காலத்தின் நடுவிலேதான், தமிழகத்தின் புகழ்பெற்ற போர்களுள் ஒன்றான தகடூர்ப் பெரும்போரும் நிகழலாயிற்று. இந்த தகடூர்ப் பெரும் போர் பிற போர்களினுங் காட்டில் ஒரு தனிப்பட்ட நினைவோட்டத்தை அந்நாளைய அறிஞர்களிடையே ஏற்படுத்தியதற்குக் காரணம், அந்தப் போரின்கண் ஈடுபட்ட மன்னர்கள் இருவரது மாண்புப் பெருக்கமே எனலாம்.

போரினை மேற்கொண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தன்னைப் போற்றிப் பத்துச் செய்யுட்களைப் பாடிய அரிசில் கிழாருக்குத் தன் நாட்டையும் ஆட்சியையும் பரிசிலாகத் தருதற்குத் துணிந்த தமிழுள்ளத்தைக் கொண்டவன்! முரசு கட்டிலில் அறியாதே துயின்ற மோசிகீரனாரை முறைப்படி வெட்டி வீழ்த்தாமல், அவரது தமிழ் நலத்தினை நினைந்து, அவருக்குத் தானே விசிறி வீசிநின்ற பண்பினன்! பொன்முடியார் பால் பேரன்பு கொண்டு திளைத்தவன். இங்ஙனம், தமிழன்பு தலைசிறந்து நிறையப் பெற்றிருந்த ஒருவனாதலால், இவன் மேற்கொண்ட தகடூர்ப்பெரும் போர், தமிழ்ச்சான்றோரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்திற்று; அவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இவனுக்குப் பகையாகித் தன்னைக் காத்துக்கொள்ள முயன்று போரிட்டவனோ, அதிகமான் ஆவான். கரும்பினைக் கொணர்ந்து தமிழகத்தில் பயிர் செய்தற்கு உதவிய அதிகர் மரபிலே தோன்றியதுடன், கரும்பினும் இனிக்கின்ற கன்னித் தமிழின்பாலும் பெருங்காதலுடன் திகழ்ந்தவன் இவன்.