பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

தகடூர் யாத்திரை


பெரிய களிற்றினைத் தாக்கிய கணை தைத்து விளங்கிய பகைவர் பசுந்தலைகள், மூக்கிடத்திருந்து வழியும் சளியைப் போல ஊற்றெடுத்தபடி நசுங்கி அயலிடத்தே கிடப்பக், கால்களிற் களையாத கழலினை உடையவரான கரிய கண்ணினையுடைய நம் ஆடவர்கள், உருத்தெழுந்து மிகுந்த சினத்தையுடையவராகச் செறுத்தனராகக், களத்திலே நாளை வெற்றிகண்டு ஆரவாரிப்பார்கள்.

“இந்நிலையிலே, இந்நாள் காவற்காடு தகடுராரிடமிருந்து போய்விட்டது. நாளை, நாம் இடிபோல முழங்குவதான மயிர்க்கண் முரசம் முழங்குமாறு சென்று தகடூரையும் கைப்பற்றிக் கொள்வோம்.

"அதனிடத்து ஐயுறல் வேண்டா. கவலையை விட்டு அமைதியடைக” என்று தெரிவிக்கின்றனர்.

கலையெனப் பாய்ந்த மாவும் மலையென
மயங்கமர் உழந்த யானையும் இயம்படச்
சிலையலைத்து உய்ந்த வயவரும் என்றிவை
பலபுறங் கண்டோர் முன்னாள்; இனியே
அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே!
மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை
மூக்கறு நுங்கிற் றுற்றயற் கிடப்பக்
களையாக் கழற்காற் கருங்கண் ஆடவர்
உருகெழு வெகுளியர் செறுத்தனர் ஆர்ப்ப
மிளைபோ யிற்று நாளை நாமே
உருமிசை கொண்ட மயிர்க்கண்

திருமுர சிரங்க ஊர்கொள் குவமே!
(தொல்காப்பிய உரையிடத்து, நச்சினார்க்கினியர்
மேற்கோள் காட்டும் செய்யும் இது)

தகடூர் யாத்திரைச் செய்யுள்கள் முற்றவும் கிடைக்கவில்லை என்பது உண்மையானாலும், எங்காவது இருந்து புதைபொருள் கிடைத்தாற்போலக் கிடைத்து நமக்கு விருந்தாகும் என்ற நம்பிக்கையுடன், அதன் சில செய்யுட்களை 48 செய்யுட்கள் அறிந்து இன்புற்ற அமைதியுடன், நாம் காலத்தின் கருணையை நோக்குவோமாக!