பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

19


அரிசில் கிழாரோ உழிஞை வேந்தனான சேரமானின் பாசறைக்கண் வீற்றிருந்தவர். போரிடை அதிகமான் வீழ்ந்ததும், தகடூர்க் கோட்டை சேரமானின் கைப்பட்டதும், அந்த வெற்றிச் சிறப்போடு, வீழ்ந்த அதிகனின் புகழ்ச் சிறப்பாலும் அவருள்ளம் நிறைகின்றது அவனைத் தமக்குப் பகைவன் எனச் சேரர் கருதினும், அவன் ஆண்ட நாட்டிற்கு அரசியற் செம்மையாலும் பிறவற்றானும் சிறந்தவனாகவே விளங்கினன். இதனை உணர்ந்த அரிசில்கிழார் அவனை இழந்ததனால் வருத்தமீதுர விளங்கிய தகடூர் நாட்டுக் குடிமக்களைக் கண்டதும், அதிகனின் இழப்பினை நினைந்து கண்ணீர் மல்கப் பாடி அவன் புகழைப் பரவுகின்றனர்.

இனி, அரிசில் கிழாரைப் போலாது, அதிகனின் அவையிடத்தேயே, அவன் பாற் பேரன்பினராகி, அவன் நலத்திற் பெரிதும் ஈடுபாடு கொண்டவராகி வீற்றிருந்த ஒளவையாரின் தமிழ் உள்ளம், அதிகனின் இறப்பினாற் கசிந்து கசிந்து நலிகின்ற தன்மையையும் காண்போம்.

‘வெட்டிச் சுட்ட கொல்லை நிலம்; குறவனால் தறுக்கப் பட்ட மரத்துண்டுகள் கரிந்த புறத்தை உடையவாய்க் கிடக்கின்றன. அத்தகைய தோற்றமுடைய விறகால் அடுக்கப்பட்ட, ஈமத்தின் கண்ணே எரிகின்ற ஒள்ளிய அழிலினிடத்தே, நின் உடல் சுடப்படுமாறு சென்று சேர்ந்தாலும் சேர்க! அவ்வாறு சேராது போய்வறிதே வானத்தைப் பொருந்த ஓங்கினும் ஓங்குக! அதிகமானே! குளிர்சுடர் மதியத்தைப் போன்ற வெண்கொற்றக்குடையினை உடையோனே! ஞாயிற்றை ஒப்பானே! நின் புகழ் என்றும் எதனாலும் மறையாது! என்று அதிகனின் புகழ்ப் பெருக்கத்தைப் பாடுகின்றார் ஒளவையார்.

எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம. ஒள்ளழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே
(புறம் 231)


அதிகமானின் உடலை ஈமத்திட்டு எரித்துச் செய்யப் படுவதற்குரியன பலவும் செய்து, சடங்குகளைச் சேரமானே செய்கின்றான். வெற்றி மிடுக்குடன், வீரப்பெருமகனை இழந்த சோகமும் கவிந்து வாட்டக் கண் கலங்கி நிற்கின்றனர் அரிசில் கிழார், பொன்முடியார் போன்றோர்.

அடுத்து, அவனுக்கு நடுகல் நாற்றிப் பீலிசூட்டி அவன் பீடும் பெயரும் பொறித்து, நடுகல் வழிபாடும் நிகழ்த்துகின்றனர்.