பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தகடூர் யாத்திரை


அப்பொழுது நடுகல்லின்கண் நிறுத்திய அதிகமானுக்குக்கள் வார்க்கின்றனர். ஒளவையார் கண்டு கலங்கிச் சோர்கின்றனர். அவர் கண்கள் கண்ணீரை வார்க்கின்றன! அவர் உள்ளம் எங்கெங்கோ சென்று சுழல்கின்றது.

சேரமானோடு பகைமை நீக்கித் திறைசெலுத்திப் பணிந்து போகுமாறு அரிசில்கிழார் பன்முறை தகடூர் சென்று பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், முற்றிய பகைமையும் மானவுணர்வும் அதிகமானை அதற்கிணங்க மறுத்துவிடுமாறு செய்து விட்டன. அந்த நிகழ்ச்சிகளை நினைந்து அரிசில்கிழார் வருந்துகின்றார். சேரமானைப் போற்றுபவர், அவ்விடத்தே இந்தச் செய்தியையும் நினைவுபடுத்துகின்றார்.

“மூங்கில் கிளைத்து விரிந்தனவாக வானை நோக்கி உயர்ந்தெழுகின்றதும், கார்மேகம் தவழ்கின்றதுமான நெடிய உச்சியினையுடைய கொல்லி மலைக்குத் தலைவனே! கொடி விளங்கும் தேர்மேற் செல்லும் பொறை நாட்டின் முதல்வனே!

நின்வளனையும் ஆண்மையையும் கொடைத்திறனையும் பற்றி, அவை மக்களது அளவினுங்காட்டில் அளவிறந்தன என்ற தன்மையினை யான் பலநாட் சென்று உரைத்தேனே. உரைப்பவும் நின் பகைவர் தெளிவற்றார் ஆயினரே பிறராகிய சான்றோர் எடுத்துச் சொல்லினால் தெளிவரென்று, கருதி, அவ்வழியும் முயன்றேனே! அவ்விடத்தும் பகைமையால் தம் மதிமருண்டு, அவர் நின்னைப் பகைத்துப் பேசுதலையே காண்பேன்! இத்தகைய மதி மயங்கியவர்க்கு எப்படி உரைத்துத் தெளிவிப்பதென யானும் மயங்குவேனே!”

கழைவிரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்பவும் தெளிகுவர் கொல்என
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே!
(பதிற். 73)

இதனால், தகடூர்ப் போரின் நிகழ்ச்சிக்கு முன்னால் அதிகமானையும், சேரமானையும் சமாதானஞ் செய்து வைக்க அரிசில்கிழாரும் பொன்முடியாரும் ஒளவையாரும் பிற தமிழ்ச் சான்றோரும் பெரிதும் முயன்றமை தெளிவாகும். அந்த அறிவுரைகளை ஏற்காது, மானமே பெரிதாகப் போரிட்டு