பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

21


மாண்டவன் அதிகமான். ஒளவையார் உள்ளம், அங்ஙனம் தூதுரைத்து வந்த சான்றோர் சொல்லிய சொற்களை நினைக்கின்றது. நடுகல்லையும் நோக்குகின்றது.

‘அதிகமானே!’ எனக் கூறிக் கலங்குகின்றார். அருகில் நின்ற அரிசில்கிழார் முதலியோர் தேற்றவும் தெளியாதவராய் ஒளவையார் புலம்புகின்றார்!

'அதிகமானை இழந்தேன். அவனை இல்லாதே கழிகின்ற காலை என்பதும் மாலை என்பதும் எனக்கு இனி இல்லாமற் போவதாக! யான் வாழ்கின்ற நாள் என்பதும் எனக்கொரு பயனாதல் இல்லாமையின், அதுவும் இல்லையாகிப் போவதாக!

'அந்நாளிலே, சிகரம் ஓங்கிய உயர்ந்த குதிரைமலை பொருந்திய நாடு முழுவதையும் நீங்கள் கொடுப்பவும், அதனை ஏற்றுக் கொள்ளாது, போரினையே மேற்கொண்டான் அவன்.

'இந்நாளில், நடுகல் நாற்றிப், பீலி சூட்டி, நாரால் அரிக்கப்பெற்ற தேறலைச் சிறுகலத்தே நீங்கள் வார்க்கின்றீர்கள். இதனை அவன் ஏற்றுக் கொள்வானோ? அவன் ஏற்கவே மாட்டான் என்று மனம் உருகிக் கரைக்கின்றார் அவர்.

இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே
நடுகற் பீலிசூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன்
கொல்லோ கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவும் கொள்ளா தோனே?
(புறம் 232)

'தகடூர் நாடு தனக்கு உரியது' என்பதில் உறுதி பூண்டவன் அதிகமான். தன் உரிமைக்குப் பழுதாகச் சேரமானை அடிபணிந்து, அவன் அந்நாட்டைத் தனக்கு அளிக்கப் பெற்று வாழ்கின்ற நிலையினை அவன் ஏற்க இசைந்தானில்லை. தன் நாட்டைக் காத்து நின்று சாவையே தழுவினான். அவன், இன்று இந்தக் கள்ளை நீங்கள் வார்த்தால் ஏற்றுக் கொள்வானோ? என்று குமுறுகின்ற ஒளவையாரின் சொற்கள், அதிகமானின் தமிழ்மறத் தகுதியின் உரைகல்லாக நிலவுகின்றது.

அதிகமானின் இத்தகைய பெரும்புகழ்ச் செவ்வியை மனத்தே கொண்டு பார்த்தால்தான், தகடூரின் வீழ்ச்சி எத்துணைப் பெரிதான ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பது நமக்கு, விளங்கும்.

ஒளவையாருக்கும் அதிகமானுக்கும் நட்பு ஏற்பட்டதே ஒரு சுவைமிக்க சம்பவம் ஆகும். அதிகமானிடம் பரிசில் நாடிச்-