பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

105


சங்கடம் உண்டாகும். அந்த 'இப்படி' என்றால் என்ன என்பது அவளுக்கே தெரியாது. ருக்குவின் தந்தையோ ஒரு கவலை இல்லாத ஆத்மா. இது அவளுக்கு மட்டும் உண்டான ஒரு தனிப்பிரச்சனை. இதில் எப்படியோ வேறு யாருக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விட்டது.

'டண், டண்'-மணி இரண்டு. தங்கம்மாள் கண் விழித்துப் பார்த்தாள். நிலா வெளிச்சம் அடியோடு மறைந்து இருள் சூழ்ந்திருந்தது. 'ஙொய்' , என்று எங்கேயோ கரிச்சான் ஒன்று கத்திக் கொண்டேயிருந்தது. தங்கம்மாள் கண்களை மூடிக்கொண்டாள். தூக்கம் எங்கே? குருட்டு யோசனைதான்; கவலைதான்.

விளையாட்டுப் போல ருக்கு வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. 'கைச் செலவுக்கு இருக்கட்டும்' என்று ஒரு வரியுடன் ஐம்பது ரூபாய் மணியார்டர் ருக்குவின் பெயருக்கு வந்திருந்தது.

"பணம் எதுக்கு? கேட்டிருந்தயா?" என்றாள் தங்கம்மாள்.

"அவர் குணமே இப்படித்தான்” என்றாள் ருக்கு.

"வறதாக போறதாக ஒண்ணும் எழுதல்லியா?”

ருக்கு விழித்துப் பார்த்தாள், சொந்த அம்மாவா இப்படிப் பேசுகிறாள் என்ற பாவணை. உடனே புறப்பட்டு வந்து சேர் என்று எழுதியிருந்தால் தங்கம்மாள் அவனை ஊருக்கு அனுப்பிவிடச் சம்மதிப்பாளா, என்ன? ஆனால், அன்பாக, ஆசையாக ஒரு வார்த்தை! அது எவ்வளவு விச்ராந்தியாக இருக்கும் மனசுக்கு! விட்டேற்றியாய் இப்படி யாராது பெண்டாட்டிக்கு எழுதுவதுண்டோ?

போதும் போததற்கு அன்று சாயங்காலமே ஊரிலிருந்து கடைசி வீட்டு விசாலம் வந்திருந்தாள். அடுத்த தெருவில்தான் அவளும் கணவனுடன் இருந்து வருகிறாள். "ஏண்டி அம்மா, இவ அகத்துக்காரரைப் பார்த்தியோ?”. என்று தங்கம்மாளால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“பார்க்காமல் என்ன? அந்த வழியாகத்தானே நாங்க பீச்கக்குத் தினமும் போகணும்! இவர் கூடக் கேட்டார்; 'ஊருக்கு அனுப்பிச்சுட்டு நிம்மதியாய் இருக்கேன்'னு சொன்னாராம். என்ன நிம்மதி, சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டுண்டு?” என்றாள் விசாலம்.

தங்கம்மாளுக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கப் பிடிக்கவில்லை, கேட்கவேண்டும் என்று துடிப்புத்தான். ஆனால் ருக்குவிடம் பயந்து கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள். ருக்குவுக்குத் தெரியும். நிம்மதி எந்த விதத்தில் என்று. அவளோ அதைக் கேட்டுக் கொண்டு மௌனமாய், அமைதியாய், சிறிது அடக்கமாய்க் கூட உட்கார்ந்து கொண்டிருந்தாள், தங்கம்மாளுக்குப் பேச என்ன வாய் இருக்கிறது?