பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

சோலை சுந்தரபெருமாள்


காஞ்சிபுரம் பத்தாறு முழ வேஷ்டிகளும், வழுக்கை யொதுக்கிப் பின் தள்ளிவிட்ட நரைத்த குடுமியும் சோபையளிக்க, முக மலர்ச்சியுடன் வீற்றிருந்தார். ஒரு பக்கத்தில் பெரிய அளவில் முரீராம பட்டாபிஷேகப் படம் மலர் மாலைகளால் ஜோடித்த கருங்காலி மர விமானத்தில் பொருத்தி வைக்கப் பெற்றிருந்தது. அதன் முன் ஆள் உயரமுள்ள இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகள் நாயுடுவின் செல்வ நிலையை நிதானமாக விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தன. மணி எட்டு அடித்ததும் மெல்லிய குரலில் பெளராணிகர் தியான லோகத்தைச் சொல்லிவிட்டுக் கணைத்துக்கொண்டார். ஒலிபெருக்கியும் ஹூங்காரம் செய்தது. கூட்டத்தின் ஆரவாரம் அடங்கியது. நிசப்தம் நிலவியது.

ராவண வதம் ஆன அனந்தராம் கிரகணம் விட்டுப் பிரகாசியா நின்ற சந்திரனைப் போன்ற பிராட்டியாரின் வதனத்தைப் பக்தியோடு ஆஞ்சநேயர் தரிசிக்கிறார். சிதை சிறைப்பட்டிருந்த காலத்தில் தேவியாரைக் குரூரமாக ஹிம்சித்த அரக்கியரைப் பார்த்து அவர்களை ஹதம் செய்வதாகத் துடிக்கிறார். சிதை ஹனுமானைப் பார்த்து, “அப்பனே, தவறு இழைக்காதவரும் உலகில் உண்டோ? பணிப் பெண்களான இவர்கள், உத்தரவுக்குக் கீழ்ப் படிந்தன்றோ இங்ஙனம் நடந்திருக்கிறார்கள்? ஆகையால் இவர்களை ஹிம்சிப்பது தகாது” என்று திருவாய் மலர்ந்தருளியதும், “ தேவியின் கருணையுள்ளத்துக்கு இணை எது?” என்று வியப்படைகிறாராம் ஆஞ்சநேயர் பக்தர்கள் அமிருதமாக பாவிக்கும் தகஸ்சித்த அபராத்யதி (குற்றமிழைக்காதவன் எவனுமில்லை) என்ற பிராட்டியின் வார்த்தைகளுக்குப் பல்வேறு அர்த்தங்களை எடுத்துரைத்து, ‘எந்தப் பாவியும் பிராட்டியின் பொன்னடியை அடைந்து உய்வு பெறலாம்’ என்பதாகத்தானே தமக்கே உரிய பாணியில் பெளராணிகர் விளக்கம் கூறினார். சபையில் இருந்த ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் இந்தக் கூட்டத்திலே தத்தம் மனநிலையைப் பரிசீலனை செய்து கொள்ள அவகாசம் கொடுத்துவிட்டு, உத்தரீயத்தினால் எதிரில் மறைத்துக் கொண்டு. கொஞ்சம் பால் சாப்பிட்டார் பாகவதர். சிறிதுநேரம் மெளனமாகப் பாவ புண்ணியங்களுக்குக் கணக்குப் போட்டு, ஐந்தொகை எடுத்துக்கொண்டிருந்த ஜனக்கூட்டம் பாகவதர் சொன்ன ஓர் உபகதையினால் குபிரென்று மெய்மறந்து சிரித்தது.

இந்தப் பிரகாரம் ஜனங்களின் சிந்தனையையும் உணர்ச்சியையும் பொம்மலாட்டத்தில் பாவைகளை சூத்திரக் கயிற்றால் ஆட்டி வைப்பதுபோலத் தமது அருமையான பேச்சுத் திறமையால் அழைத்துக்கொண்டே பட்டாபிஷேக அவசரத்தைக் கிட்டி நிறுத்தினார் பாகவதர்.