பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

125



ஶ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் எழுந்து இவ்வளவு காலமாகத் தொடர்ந்து கதா காலட்சேபத்துக்கு வந்திருந்த மகா ஜனங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, மகாஜனங்களின் சார்பாகப் பொன்னாடையைப் போர்த்திப் பாகவதருக்குச் சம்மானம் அளிக்கும்படி வினயமாகக் கேட்டுக்கொண்டார் மந்திரியை.

மந்திரிகளிடையே அழகு மிக்கரான மகேச குமார சர்மா புன்னகையுடன் எழுந்து பாகவதரையும், நாயுடுவையும், சபையோரையும் முறையே கை கூப்பியபடி பார்த்து வணங்கினார். நாயுடு எடுத்துப் பிரித்துக் கொடுக்கப் பொன்னாடையை வாங்கி மகேச குமார சர்மா பாகவதருக்குப் போர்த்தினார். பெரியதொரு மலர் மாலையை அணிவித்தார். பளிச்சுப் பளிச்சென்று புகைப்படக் கருவிகள் மின்னல் வெளிச்சத்தை வர்ஷித்தன. பழங்களும், புஷ்பங்களும் நிரம்பிய பெரிய வெள்ளித் தாம்பாளத்துடன் ஆயிரம் வராகன் அடங்கிய பொற்கிழியைப் பாகவதருக்குச் சம்மானம் அளித்து மந்திரி பேசினார்; “தாய்மார்களே, ரசிகமணிகளே, இன்று இதில் பெரியவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்வதை மகத்தான பாக்கியமாகக் கருதுகிறேன். பத்திரிகைகளும், மலிவு நாவல்களும், அதிகமாகிவிட்ட இக்காலத்தில் ராமாயணத்தைப் படிக்கிறவர்கள் குறைவு. பாகவதர் அவர்களைப் போன்ற மகான்கள் உபந்நியாசம் செய்வதனால்தான் ராமாயணம் மறைந்து போய்விடாமல் இருக்கிறது என்று நம்புகிறேன். ராமாயணத்தைக் கேட்கிறவர்களே அதிகம். படிக்கிறவர்கள் அதிகமில்லை. உங்களிலே, வீட்டுக்குப்போய் ராமாயணத்தை எடுத்துவைத்துக் கொண்டு படிக்கிறவர்களைக் கை துர்க்கச் சொன்னால் சிறுபான்மையாரே கைதூக்குவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தக்காலத்து மனிதர்களுக்கு எதையும் சுவாரஸ்யமான முறையில் வழங்கவேண்டும். ருசியில்லாத விஷயங்களில் ஜனங்களுக்கு ஈடுபாடு கிடையாது. அதனால் பாகவதர் அவர்கள் ரசமான உபகதைகள்சொல்லி மக்களின் கவனத்தைக் கவர்ந்து இடையிடையே ஸத்விஷயங்களைப் போதனை செய்கிறார்கள். அழகான பெட்டிகளில் மிட்டாய்களை வியாபாரம் செய்கிறார்கள். மிட்டாய் தேவையிராவிட்டாலும், வர்ணப்படம் தீட்டிய பெட்டிகளுக்காக வாங்குகிறோம் அல்லவா? பெட்டியை வாங்கி அவைகளைக் காலி செய்வதற்காக மிட்டாயைச் சாப்பிடுகிறோம். (கரகோஷம்) அப்படிப்போல, பாகவதர் அவர்களுடைய உபகதைகளுக்காக வந்து ராமாயணம் கேட்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். (சிரிப்பு) சிரிக்கிறதிலே பயனில்லை. வெறும் ராமாயணத்தைச் சொல்லுங்கள். எத்தனை பேர் வந்து கேட்பார்கள்? உபகதைகள் சொல்வதைப் பற்றியும் நான் தவறாகச் சொல்லவில்லை. அவைகளுள் எவ்வளவோ