பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சோலை சுந்தரபெருமாள்


அடிப்படை உண்மைகள் பொதிந்திருக்கின்றன. தர்மரத்னாகர ஸ்ரீரங்கபாஷ்யம் நாயுடு அவர்கள் பல அரிய பெரிய தரும கைங்கரியங்கள் செய்திருக்கிறார்கள். தர்மரத்னாகரம் என்ற பட்டம் தக்க இடத்தைத் தான் நாடி அடைந்திருக்கிறது. பொது ஜனங்கள் சார்பாகப் பாகவதருக்குச் சம்மானம் செய்வதாக அவர்கள் வினயமாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆயிரம் வராகன்களை அவர்களே கொடுத்திருக்கிறார்கள். வெளியில் யாரிடமும் வசூல் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இப்படி நல்ல காரியங்களுக்குத் தம்முடைய தனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற ஸ்ரீ நாயுடுவுக்கு, ‘தர்மரத்னாகர’ என்ற பட்டத்தைச் சூட்டினவர்களும் நம் முடைய பாராட்டுக்குரியவர்கள்.”

மந்திரி அமர்ந்ததும் ஸ்ரீ நாயுடுவின் நண்பர் என்ற முறையில் அழைப்பின் பேரில் வந்திருந்த திரு இளந்திங்கள் எழுந்து, “நான் இங்கு வந்து பேசுவதிலே உங்களுக்கு வியப்பே விளையும். இராமாயணத்துக்கும், எனக்கும் முரண்பாடு இருந்தாலும் ராமாயணம் ஒரு சிறந்த இலக்கியம் என்பதை நான் ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. உயர் திருவாளர் ஆச்சாரியார் அவர்கள் அற்புதமான பேச்சாளர். கடல் மடை திறந்ததன்ன, தங்கு தடையின்றிப் பொங்கிப் பெருகும் அவருடைய சொற்பொழிவு கேட்போரை மயங்க வைக்கிறது. வேறு எந்த நோக்குடன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தபோதிலும் இலக்கிய வளர்ச்சிக்காக அள்ளி வழங்கியிருக்கும் திருவாளர் நாயுடுவின் ஈகைப் பண்பைப் பெரிதும் போற்றுகிறேன். தமிழ் மூதாட்டி சொன்னதுபோல் சித்திரம் எழுதுவது, மேடைமேலே பேசுவது எல்லாம் கைப்பழக்கம், நாப்பழக்கம். ஆனால் பிறவிக் குணந்தான் ஈகை. கை எதற்காக ஏற்பட்டிருக்கிறது என்றால் ஈவதற்கேதான்” என்று சொல்லும்போது ப்ஸ் ப்ஸ்ச என்று எங்கிருந்தோ வந்து காதில் விழுந்த அருவருப்புத் தொனியைக் கேட்டுவிட்டு, கெளரவமாக உட்கார்ந்துவிட்டார்.

அப்புறம் பல பிரமுகர்கள் ஒருவர் பின் ஒருவராக எழுந்து மேடைக்கு வந்து பேசினார்களோ, பேசினார்களோ அப்படி ஆசை தீர தர்மரத்னாகர ஸ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடுவுக்குப் புகழ்மாலைகளாகச் சூட்டிக்கொண்டே இருந்தார்கள். மந்திரி இடையிலே எழுந்து அவசர ஜோலி இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்றோடு நாலாவதாகப் புகழாசை என்பதைப் பெரியவர்கள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். காரணம் உண்டு. முதல் மூன்றும் ஓர் எல்லையிலே தெவிட்டிப் போகும். ஆனால் புகழாசையோ வளர்ந்து கொண்டே இருப்பது. முற்றும் துறந்த