பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சோலை சுந்தரபெருமாள்


கட்டியிருந்தது. “லேசான ஜூரம் தான்; நாளை சரியாகிவிடும்” என்று டாக்டர் சொல்லி நாயுடுவுக்கு இன்செக்ஷன் செய்தார். “நான் போய் ஒரு நர்சை அனுப்புகிறேன். மார்பின் மேல் ஆண்டிபிளாஜஸ்டைன் போடவேண்டும். சாயங்காலம் வருகிறேன்” என்று சொல்லி எழுந்திருந்தார்.

“அவசியமா என்ன?” என்று நாயுடு கேட்டார்.

“இல்லாவிட்டால் கபம் அதிகமாகும். அவசியம்தான்” என்றார் டாக்டர்.

“அது உங்களுக்கல்லவா தெரிந்த விஷயம்? உங்களிடம் ஒப்படைத்தாகிவிட்டது உடலை. என்ன செய்தாலும் ஒப்புக்கொண்டு தானே தீரவேண்டும்?” என்று நாயுடு சிரித்துக்கொண்டே கூறினார்.

டாக்டரும் கலகல என்று சிரித்துக்கொண்டு, “நான் வரட்டுமா?” என்று கைக் கெடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே வெளிக் கிளம்பினார். கட்டியிலின் ரப்பர் நுரை மெத்தையும் நாயுடுவுக்கு உறுத்தியது. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

தர்மரத்னாகர ஶ்ரீ ரங்கபாஷ்யம் நாயுடு, “வாயில் வெள்ளிக்கரண்டியைக் கெளவிக் கொண்டு பிறக்கவில்லை.” கீழே இருந்து மேலே ஏறியவர். இருபத்துஏழு ரூபாய்ச் சம்பளத்தில் லைடன்ஹாம்ரோட்டில் ஒரு மரவாடியில் குமாஸ்தாவாக வாழ்க்கை தொடங்கிய அவர் சையது இப்ராஹிம் மரக்காயர் என்ற தம்முடைய கடை முதலாளியிடம் படித்துக் கொண்ட பாடத்தை இன்றளவும் மறக்கவில்லை.

“பாஷ்யம் வியாபாரமும் ஒரு விதத்திலே நல்ல தேச சேவை தான். நல்ல சாமான்கள் எங்கு எங்குக் கிடைக்கும் என்று தேடிக்கொண்டு வந்து தேவைப்படுகிறவர்களுக்குக் குறைந்த விலைக்குக் கொடுப்பது உபகாரம் அல்லவா? ஒருவரை ஏமாற்ற வேண்டாம். போட்டியிட்டு மோசம் செய்யத் துணியவேண்டாம். ஜனங்களுக்கு நம்பிக்கை வேண்டும். அந்த ‘குட்வில்’ தான் நமக்கு எல்லாவற்றையும்விட சிறந்த மூலதனம்” என்று சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்ன வார்த்தைகள் பசுமரத்தாணி போலே நாயுடுவின் மனத்திலே பதிந்திருந்தன.

இப்ராஹிமின் பிள்ளைகள் உதவாக்கரைகள். அவர் ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வந்த பிறகு வியாபாரத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டார். கொள்முதல் செய்வது முதல் விற்பனை செய்வது வரை எல்லாப் பொறுப்புக்களையும் நாயுடுவிடமே ஒப்படைத்துவிட்டு, சர்வாந்தர்யாமியாய், சர்வசக்தியனாய் விளங்கும் கடவுளைத் தொழுது கொண்டே காலம் போக்கினார். நாயுடுவையும் ஒரு பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு இரண்டு வருஷங்களில் கடையையும் நாயுடுவிடம் பல தவணைகளில் விற்பனைப் பணம் கொடுக்கும்படி விற்றுவிட்டார். ஏகதேசம்