பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

129


நாயுடுவுக்குக் கடை சொந்தமான பிறகும் மரக்காயரை தினம் ஒரு தடவை பார்த்து அவர் அளவளாவிவிட்டு வந்தார்.

ஒருநாள் நாயுடு இப்ராஹிம் மரக்காயரின் பங்களாவுக்குப் போயிருந்தபோது அவர் சோபாவில் உட்கார்ந்து இஸ்லாமிய வேதப்புத்தகத்தின் வியாக்யானம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நாயுடுவைக் கண்டதும் மரக்காயர் எழுந்துவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு, “இங்கே வா, பாஷ்யம்- என் அருகில் உட்கார். நிறையச் சம்பாதித்துவிட்டேன். பிள்ளைகளுக்குச் சாமர்த்தியம் இருந்தால் சொத்தை வைத்துக் கொண்டிருக்கட்டும். உருப்படாதவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்? என் பிள்ளைகளைவிட உன்னிடம்தான் அப்பா எனக்குப் பிரியம். இனிமேல் எனக்கு ஒன்றும் நீ தரவேண்டியதில்லை. எப்போதும் கடவுளை நினை. ஆண்டவன் நல்ல லாபம் கொடுப்பான். உன் லாபத்தில் ஆறில் ஒரு பங்கு தர்மத்துக்காகக் கொடுத்துவிடு. நீ நல்ல பிள்ளை. இவ்வளவு உனக்குச் சொன்னால் போதும்” என்று நாத்தழுதழுக்க முதியவரான சையது இப்ராஹிம் மரக்காயர் சொன்னதும் நாயுடுவுக்கு நன்றியறிதலால் கண்களில் நீர் தளும்பியது. இந்தச் சம்பவத்தை இப்போது நினைக்கும்போதும் நாயுடுவுக்கு மயிர்கூச்சு ஏற்பட்டது. சையது இப்ராஹிம் காலமான பிறகு சிலகாலம் நாயுடு திக்கற்றவர் போல் இருந்தார்.

நாயுடுவுக்கு வாய்த்த மங்கைநல்லாளும் இல்லறத்தை நல்லறமாக நடத்த உறுதுணையாக இருந்தாள். மரக்காயருக்குக் கொடுத்த வாக்குப்படி நாயுடு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். எந்த நல்ல காரியங்களுக்கு நிதி திரட்டினாலும் நாயுடுவின் பெயர் முதல் வரிசையில் இருக்கும். எந்த ஆஸ்பத்திரிக்குப் போனாலும் நாயுடுவின் பெயரில் வார்டு இருக்கும். கோயில்களில் தேசாந்திரிக் கட்டளைச் சீட்டுகள் அவர் பெயரால் வழங்கப்பட்டன. ஷேத்திரங்களில் சத்திரங்கள் கட்டினார். திவ்யப் பிரபந்தத்தை அச்சிட்டுப் பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு இனாமாக வழங்கினார். வியாபாரம் நன்றாக வளர்ந்தோங்கியது. இரண்டு கிளைகள் ஏற்படுத்தினார். தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. தம்முடைய இரண்டு புதல்வர்களையும் வியாபாரத்திலேயே கலந்துகொள்ளச் செய்ய வேண்டுமென்பது அவருடைய விருப்பம். என்ன சொல்லியும் உத்தியோகத்திலேயே நாட்டமுடையவர்களாகப் பையன்கள் இருந்தார்கள். அவரவர் விருப்பம் என்று அதிகம் வற்புறுத்தாமல் விட்டுவிட்டார் நாயுடு. தம்முடைய மருமகனிடம் வியாபாரத்தை ஒப்படைத்துவிட்டு நாயுடு ஒய்வெடுத்துக் கொண்டார். ஐம்பது லட்சம் இருக்கும் என்று நாயுடுவின் சொத்துக்கு அவருடைய நண்பர்கள் சிலர் மதிப்புப் போட்டார்கள்.