பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

141


உட்கார்ந்திருப்பவரையும், அடுத்த காரிலிருப்பவர்களையும், அதற்கப்பாலுள்ள கார்களையுமே மாறி மாறி நோட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவனது பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் தரை மகாஜனங்களை அவன் சட்டை செய்யவே இல்லை. அவர்களெல்லாம் தர்மம் செய்வதற்கு லாயக்கற்றவர்கள் என்பது அவனுடைய தீர்மானமோ என்னவோ? ‘டிக், டிக்’ என்று இயங்கிக் கொண்டிருந்த ‘மீட்டர்’ கருவியையும், லெவல் கிராஸிங்கின் சிவப்பு விளக்கையும் கவலையுடன் பார்த்தவாறு, டாக்சியில் அப்படியும் இப்படியுமாக நெளிந்தபடி அமர்ந்திருந்த பிரமுகர், சட்டென்று திரும்பி, “போடா! சீ, போ! இங்கே மனுஷன் அவஸ்தைப்படறது போறாதுன்னு, இவன் வேற வந்து உயிரை எடுக்கிறான்! இந்தச் சனியன் பிடிச்ச இடத்திலே இது ஒரு தொல்லையாப் போச்சு!” என்று சீறினார்.

பையன் இதை காதில் வாங்கிக் கொண்டானோ இல்லையோ, அடுத்து நின்ற காருக்குப் பாய்ந்து சென்றான். மீண்டும் அதே பாட்டு, அதே ஆட்டம்!

அந்தக் காரில் இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் அமர்ந்திருந்தனர். நரிக்குறவச் சிறுவனின் பாட்டைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் காரில் அமர்ந்திருக்கும் தாங்கள் அந்தப் பாட்டை ரசிப்பது அகெளரவம் என்று எண்ணியோ என்னவோ, சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டனர். பிறகு அம்மூவரில் ஒருவர் முகத்தில் அருவருப்புக் குறி தோன்ற இடது கையைத் துவள ஆட்டி, ஒண்ணுமில்லே, போடா!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

தெற்கிலிருந்து ஒரு மின்சார ரயில்வண்டி ஒடி மறைந்தது. கதவு திறக்கப்படவில்லை. பையன் அடுத்த காருக்குத் தாவினான்.

அந்தப் பழைய மாடல் காரில் உட்கார்ந்திருந்த பழைய மாடல் மனிதரொருவர் பையனின் பாட்டையோ, லெவல் கிராஸிங் விளக்கையோ கவனியாமல், கையில் பிரித்து வைத்திருந்த தினப் பத்திரிக்கையில் ஆழ்ந்திருந்தார். நரிக்குறவச்சிறுவனின் அவியல் பாட்டுத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அமைதியாகத் தலை நிமிர்ந்து அவர், தமது பெரிய மணிப்பர்சை நிதானமாக திறந்து அதிலிருந்து சில்லறைகளைச் சீய்த்து, ஒர் ஐந்து பைசா நாணயத்தைப் பொறுக்கி எடுத்துக் காரின் ஜன்னல் வழியே தூக்கிப் போட்டார். விலை மதிப்பற்ற நேரத்தை வீணாக்காதவர் போலவும், சந்தர்ப்பக் கோளாறினால் அப்படி வீணாகும் நேரத்தில், இம்மாதிரி ஒரு தர்மம் செய்து அதைப் பயனுள்ளதாக்கிக் கொள்கிற வழக்கமுள்ளவர் போலவும்