பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

சோலை சுந்தரபெருமாள்


ஒரு மாதம்தான் ஆகிறது. அந்த இடத்தில் எப்போதும் ஏதாவதொரு குறக்கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு கூட்டம் இடம் பெயர்ந்தால், மறுநாளே இன்னொரு கூட்டம் வந்து சேரும். காற்று மழைக்குத் தங்கிக் கொள்ள பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் வசதியாக இருப்பதால், அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.

சற்றுமுன் அடியும், உதையும் வாங்கிக்கொண்டு, அதோ பூனைக்குட்டி போல் முனகிக் கொண்டிருக்கும் அந்தக் கிழவிதான் திண்டிகோடாவின் தாயார்க்காரி. சிறுவன் மயிலங்கோடா அவனுடைய தம்பி, வண்டிகோடி என்பது அவன் மனைவியின் பெயர். அவளுக்குக் கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆகிறது. திண்டிகோடா, திண்டிவனத்தில் பிறந்தவன்; மணிலங்கோடா, மயிலத்தில் பிறந்தவன்; வண்டிகோடி, விக்கிரவாண்டியில் பிறந்தவள்!...

“இன்னாடா, கம்முனு இருக்கிறே? எங்கனாச்சும் ‘சல்பேட்டா’ போட்டுக்கினு வந்துட்டியா?” என்று குறும்பாகச் சிரித்துக் கேட்டான் பழக்காரன்.

“போ, சாமி! மன்சன் வவுறு பத்தி எரியறான்; நீ இன்னாடாக்கா, தமாஸ் பண்றே?” என்று பெருமிக் குமுறினான் திண்டிகோடா.

“இன்னாடா விசயம்? சும்மா சொல்லுடா. என்கிட்டே?”

“கஸ் மாலம்! கஸ்மாலம்!” என்று தலையடித்துக் கொண்ட நரிக்குறவன், சடாரென்று எழுந்து, “ஏ, சாமி! என் சமுசாரம் ஓடிப்பிட்டா சாமி, ஓடிப்பிட்டா” என்று புலம்பலுடன் கூவித் தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் குந்திக் கொண்டான்.

பழக்காரன் இதைக்கேட்டு உற்சாகமடைந்தவனாக பீடியை வேகமாக உறிஞ்சிப் புகையை ஊதிக் கலைத்துவிட்டு, “யாரு, உன் பொஞ்சாதி வண்டிகோடியா?” என்று ரொம்பவும் அக்கறையாகக் கேட்டான்.

திண்டிகோடா வெறுப்புடன் தலையசைத்தான்.

“அட, பாவமே! காலம்பறகூட அவ இங்கதானே இருந்தாள்? நான் கொத்தவால்சாவடிக்குப் போயி, சரக்குப் போட்டுக்கினு வந்தப்போ பார்த்தேனே?”

“ஆமா, சாமி! அதுக்கப்புறம்தான் தெருமேலே கிளம்பிப் போனாள்.”

“எதுக்கு?”

“ஊசி, மணிவிக்க”.

“அப்புறம்?”

“பண்டிமேலே போயிட்டாளாம்?”

“என்னது?"