பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

147



“கார்பண்டிமேலே போயிட்டா சாமி!”

“ஓ!...ஊர்மேலே போயிட்டாளா?” என்று கெக்கலி கொட்டி நகைத்தான் பழக்காரன்.

திண்டிகோடாவின் கண்கள் சிவந்து பழுத்தன. எரித்து விடுவதுபோல் விழித்துப் பார்த்தான் அவன்.

“ஆமா, இது எப்படிடா உனக்குத் தெரிஞ்சது?” என்று வாழைப்பழத்தை உரிப்பது மாதிரி நைஸாக விசாரித்தான் பழக்காரன்.

“இப்பத்தான் சாமி, என் தம்பிப் பய வந்து சொன்னான்”

“அவனுக்கு எப்படித் தெரிஞ்சுதாம்?”

“ரயில் கேட்டண்டைப் பார்த்தானாம். பெரிய கார்பண்டியிலே குந்திக்கினு போனாளாம்.”

“தனியா போனாளா? இல்லே. ஜோடி மேலே போனாளா?

“பக்கத்திலே யாரோ ஒருத்தன் குந்திக்கினு இருந்தானாம் சாமி!” என்று தொண்டையடைக்க, பல்லைக் கரகரவெனக் கடித்துக்கொண்டு சொன்னான் திண்டிகோடா.

“கொறப் பொண்ணு பலே கைகாரிதான்போல இருக்கு” என்று கடகடவெனச் சிரித்த பழக்காரன், பீடியைப் பாதியில் அனைத்து, செவியிடுக்கில் செருகிக்கொண்டு, ம்... அவள் மேலே மிஷ்டேக் இல்லே நைனா!” என்றான் அலட்சியமாக. மீண்டும் அவன் தொடர்ந்து, “ஆமா, அவள்தான் ஓடிப் போயிட்டா; அதுக்கு ஏன் உன்னோட ஆத்தாளைப் போட்டு அடிச்சே?” என்று வினவினான்.

“பின்னே என்ன சாமி? அந்தக் கய்லாத்து இப்படிப் பண்ணிப்பிட்டாளேன்னு இந்தக் கெய்விக்கிட்டே சொன்னா அதை நம்பமாட்டேங்குது. அவளை விசாரிச்சுக்கிட்டு அப்புறம் பேசிக்கலாம்னு சொல்லுது. அந்தக் கய்தே வரதுக்கு முன்னே, எங்கனாச்சும் புறப்பட்டுப் போயிடலாம்னு சொன்னா அதுக்கும் ஒப்புத்து வரமாட்டேங்குது. ஈசாம வருமா இல்லியா சாமி? அதுக்குத்தான் ரெண்டு வாங்கு வாங்கினேன்!” என்று பொங்கிக் குமுறினான். திண்டிகோடா.

“அட, சர்த்தான் போடா! உலகம் போற போக்கிலே அவளும் போயிருக்கிறா. திரும்பி வரப்போ நெறையப் பணம் கொண்டாருவாடா. உன்பாடு லக்குதான்” என்று கூறி ஒரு கோணல் சிரிப்புச் சிரித்தான் பழக்காரன்.

இதைக்கேட்ட நரிக்குறவன் அடிபட்ட வேங்கைப்போல் துள்ளியெழுந்தான். அவன் முகம் பயங்கரமாகக் கறுத்துச் சிறுத்தது. “இன்னா சாமி சொன்னே? எங்க சனங்களைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. நாங்கெல்லாம் சோத்திலே உப்புப் போட்டுத் துண்றவங்க. நேரம் தப்பி வந்தாலுமே பொண்ணுங்களை நாங்க சேத்துக்க மாட்டோம். இந்தக் கஸ் மாலத்தையா சேர்த்துக்குவோம்? எங்க சாதி சனமே அவ மூஞ்சியிலே இனி