பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

சோலை சுந்தரபெருமாள்


போனார்கள் சைன் கொஞ்சம் தள்ளியிருந்த வாராவதியின் மேல் போய் நின்று கொண்டு ஏரியைப் பார்த்தான். ஏரியின் கரைக்கு அப்பால் ஒரு உயரமான மேடையும் ஒரு பெரிய கிணறும் தெரிந்தது. பக்கத்தில் ஒரே ஒரு குடிசை மட்டும் தெரிந்தது. அங்கு ஒரு பம்ப்செட் இருக்கவேண்டும் என்று அவன் ஊகித்தான்.

இந்தத் தனியான இடத்தில் ஒரு சிறு குடிசையில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த யாரோ ஒரு உழவனை நினைத்துக் கொண்டான். எவ்வளவு சுகமான வாழ்க்கை! இவன் தெருவுக்கு இவனே ராஜா. இவன் ஊருக்கு இவன் மட்டுமே குடிமகன். யாரோடும் பேசாமல் இவன் மட்டும் தனியாகத் தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பான். பிறரின் ரகசியங்களை அவலாக மெல்ல நினைக்கும் ருசி இவனுக்கு இருக்காது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் காப்பியைக் குடித்துவிட்டு ‘ஹிந்து’வைப் படித்து விட்டு பக்கத்து வீட்டுக்காரனோடு வம்பளக்கப் போகாதவனாய் அவன் இருப்பான்.

வேளா வேளைக்கு இருப்பதைத் தின்றுவிட்டு வயலில் உழப் போய்விடுவான். சொந்தக்காரன் எங்காவது பட்டணத்தில் ஒரு ரேஸ் கோர்ஸில் இவனது பகல்நேர உழைப்புகளையெல்லாம் குதிரை வாலில் விட்டுக் கொண்டிருப்பான். இந்த விவசாயிக்குக் கவலைகள் அவ்வளவாய் இருக்காது. ரேவதி, நளினி, விஸ்கி, பிராந்தி எதுவும் இருக்காது. சினிமாவோ கிடையாது. இவனின் ஒரே பொழுதுபோக்கு இவன் மனைவியாய்த்தான் இருக்கும். தன் உடலின் பசி உயரும் பகல் பொழுதில்கூட அவனால் அவன் மனைவியைக் குடிசைக்குள் கூப்பிட முடியும். அவளும் சிணுங்காமல் போவாள். நிம்மதியான வாழ்க்கை...ம்...

கணேசன் திரும்பிப் பார்த்தான். அந்தப் பக்கமாய் வந்த கார்டு பலர் சூழ நடந்து கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவரைக் கேள்வி கேட்டுத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் யாருக்கும் பதில் சொல்லாமல் அலட்சியமாய் நடந்து கொண்டிருந்தார். அவர்களும் விடாமல் அவரைத் துரத்தி ரயில் நின்று போன காரணத்தைக் கேட்டார்கள். கார்டு தன் கையில் பிடித்திருந்த விளக்கின் பச்சையை, சிவப்புக்கு மாற்றிவிட்டு, அவர்களைப் பேசாமல் இருக்கும்படி சைகை காட்டிவிட்டு மேலே நடந்தார். ரயிலின் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த ஒரு கிழவர், ‘இப்படித்தான் போன வருஷம் நான் டில்லிக்கு போறச்சே...’ என்று கதை சொல்ல ஆரம்பித்தார்.

கணேசன் லயன் ஓரமாகக் கிடந்த கற்களில் ஒன்றைப் பொறுக்கி, ‘சீ, ஜனங்க ஏன் இப்படி அர்த்தமே இல்லாம அபத்தமா பேசிக்கிட்டிருக்காங்க’ என்று நினைத்தவாறே ஏரியில்