பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சோலை சுந்தரபெருமாள்


மாறவேண்டும். காலில் முள் குத்திவிட்டால், முறிந்துவிட்டால், வண்டிக்காரன் பயந்தவனாக இருக்க வேண்டும். என்னதான் மேல் வரும்படி வந்தாலும் காப்பி, தேத்தண்ணீருக்குத்தான் சரியாக இருக்கும். கல்யாணம் செய்துகொள்கிற அளவுக்குச் சாதாரண போலீஸ்காரருக்குக் ‘கிம்பள சான்ஸ்’ கிடைக்குமா?

மனைவி இறந்துபோன துக்கம் மறைந்து, அடுத்த கல்யாணம் கிடையாதா என்ற கேள்வி ஏக்கமாக வளர்ந்து, சின்னச்சாமியின் இருதயத்தைத் துறட்டி போட்டு இழுக்க ஆரம்பித்தது. வைகாசி, ஆவணி, தை-இப்படி மாதக்கணக்குகள் புரண்டு இந்த வருடம் அடுத்த வருடம் என்று ஒத்திபோடப்பட்டு அவனுக்காகப் பார்த்த பெண்கள் எல்லாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளையும் பெற்றுவிட்டார்கள். அவன் கதிதான் இப்படி என்றால், பருவமடைந்து ஆறு வருடமாக வீட்டிலிருக்கும் காந்தாவுக்கும் கணவன் வரவில்லை. காந்தா விகாரமில்லை; சுமாரான அழகி, கறுப்புதான். கவின் பெறுமுகமும் எடுப்பான தோற்றமும் வாய்ந்த திராட்சைக் கொடி அவள். பெண் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை; “சீர்வரிசை என்ன செய்வார்கள்? கல்யாணச் செலவு பெண் வீட்டாருடையதுதானே?” இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலேயே காந்தா அரும்புப் பருவம் அழியாமலிருந்தாள். சின்னசாமியின் இருதயம் நைந்துவிட்டது. சின்னசாமி வாழ முடியாதவன். காந்தா அவனால் வாழவைக்கப்பட முடியாதவள்.

மன அலைகளால் மயங்கிப் போயிருந்த அந்தத் துயர உருவம் திடீரென விரலில் சுட்ட பீடியின் நெருப்பால் உணர்ச்சி பெற்றுத் திடுக்கிட்டது. நிலாவும் மேகத்தில் மறைந்து கொள்ளவே சின்னசாமி ஒரு பெருமூச்சோடு எழுந்தான். கதவைத் தாழிட்டுவிட்டு, விளக்கைக் கொஞ்சமாய் அடக்கிவிட்டு, அந்தக் கிழிந்த பாயில் படுத்துக் கொண்டான். அவன் கண்களில் சோகம் படர்ந்திருந்தது. காந்தா உடம்பை நெளித்துக் கொண்டு சோம்பல் முறித்ததிலிருந்து அவளுடைய இருதயத்திலும் ஒரு பெரும் போராட்டம் நடந்திருக்கத்தான் வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வாழ்நாளின் வனப்புமிக்க ஒரு பகுதி வீணே கழிவதென்றால்?... கொஞ்சு மொழியும், கோலாகலமும் அனுபவிக்க வேண்டிய பருவத்தில் ஊமையாக முடங்கிக் கிடப்பதென்றால்?... காதல் கீதத்திற்கேற்ற இன்பக் கேளிக்கையாட வேண்டிய இளமைநாட்கள், நொண்டியாகி விடுவதென்றால்?... எந்தப் பெண்ணால் தான் தாங்கிக் கொள்ள இயலும் அந்த வேதனையை!

இந்த இருண்ட உலகில் ஒரு மனித ஐந்துவின் வீடு அங்கே இரண்டு கிழிந்த பாய்கள். பாயைவிட அதிகமாகக்