பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

சோலை சுந்தரபெருமாள்


அழகெல்லாம் அவளிடத்திலேயே குவிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகட்கு முன் திருவாரூர் தியாகராசர் கோயில் தெப்ப உற்சவத்திற்குக் கச்சேரியின் பொருட்டு வாசிக்கச் சென்றிருந்த போது முத்துத்தாண்டவன் அலங்காரத்தை முதன் முதல் சந்தித்தான். ஆயிரங்கால் மண்டபத்தில்-ஆயிரம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் தேஜோமயமாய்த் திகழ்ந்த அரங்கத்தில்- கந்தர்வலோகத்து தெய்வப் பெண்போல அவள் சுழன்று சுழன்று ஆடிய காட்சி முத்துத்தாண்டவனின் மனத்தைக் கிறங்கச் செய்தது.

“பித்துப்பிடித்து ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே.”

அவளது அழகிய உதடுகளைப் பிளந்துகொண்டு ஒலி வடிவாக வெளிப்பட்ட அந்த நளினமான வார்த்தைகளும் அந்த வார்த்தைகளின் ஜீவனைப் பிடித்து இழுத்துவந்து இதுதான் என்று காட்டுவதுபோல் அவள் பிடித்த அபிநயங்களும் ஆடற்கலைக்கே அவளை ஆதர்சமாக எடுத்துக்காட்டிற்று.

திருவாரூருக்குப் போய்விட்டுத் திரும்பிய முத்துத்தாண்டவன் புகழை மட்டும் அல்லாமல் அலங்காரத்தைப் பற்றிய நினைவுகளையும் சுமந்து கொண்டு வந்தான். எல்லாம் அதற்குப் பின் விளைந்த வினைதான். அலங்காரம் இப்பொழுது இவன் ஊருக்கே வந்துவிட்டாள். முத்துத்தாண்டவன் பக்கத்துத் தெருவில் ஒரு மனைக்கட்டை விலைக்கு வாங்கி, ஓர் அழகான வீட்டைக் கட்டி, அதில் அலங்காரத்தைக் குடியேற்றி வைத்தான். அவள் வந்து மூன்று மாதங்கட்குமேல் ஆகிறது. ஊரார் கட்டிவிட்ட கதைகள் முத்துத்தாண்டவனையோ அலங்காரத்தையோ பாதிக்கவில்லை. பாதிக்க முடியாத உயர்ந்த புகழ் உச்சிக்கு அவர்கள் ஏறிவிட்டார்கள். குத்தவேண்டும் என்று நினைத்து மாற்றான் மேல் வீசி எறியப்பட்ட வேல் அவனுக்கு ஊறு விளைவிக்காமல் முனை மழுங்கி விழும்போது, வேலை வீசியவன் சலிப்படைந்து விடுவதுபோல் ஊராரும் சோர்ந்துபோய்த் தங்கள் புனை சுருட்டுக் கதைகளை விட்டுவிட்டார்கள். ஆனால் இதையெல்லாம் மெளனமாகக் கண்டு வடிவு குமுறிக் கொண்டிருந்தாள்.

கோயிலுக்குப் போக மனமில்லாமல் திண்ணைக் குறட்டிலேயே முந்தானையை விரித்துப் போட்டு, பக்கத்தில் மகனைக் கிடத்திக்கொண்டு படுத்துவிட்டாள் வடிவு. விடிய விடிய அதிர்வேட்டுச் சத்தங்களும், சொற்களில் பிடிபடாத ஆரவாரமும் ஊரில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. எதிர்வீட்டுக் கிழவி தில்லைக்கண்ணு தூக்கம் பிடிக்காமல் கையில் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டுப் பக்கம் வந்தபோது வடிவுதிண்ணைக் குறட்டில் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டாள்.