பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சோலை சுந்தரபெருமாள்



தில்லைக் கிழவி நீண்ட நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். கடைசியில் “நான் வரவேண்டியம்மா தூக்கம் ஆளை அசத்தியறது...” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். வடிவாம்பாளும் எப்படியோ கண்ணயர்ந்தாள்.

பொழுது விடிந்தது. கோயிலிலிருந்து பண்டாரம் வந்தான். முத்துத்தாண்டவன் ஏதோ அவசர வேலையாக வெளியூர் போயிருப்பதாவும், வருவதற்கு இரண்டு நாள் ஆகுமென்றும் வடிவாம்பாளிடம் சொல்லிவிட்டுப் போனான். எங்கேயாவது கோயிலில் இருந்தோ அல்லது தனிப்பட்ட சபாக்களிலிருந்தோ கச்சேரிக்கு அழைப்பு வந்திருக்கும் என்று அனுமானித்துக் கொண்டாள் அவள்.

முத்துத்தாண்டவன் வெளியூருக்குச் சென்றிருக்கும் செய்தி அலங்காரத்திற்கும் தெரியாது. கோயில் பண்டாரம்தான் காலையில் அவளுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் போனான். ‘திடீரென்று புறப்பட்டுப் போனதற்குக் காரணம் என்னவாக இருக்குமோ’ என்று கவலையுற்றாள் அலங்காரம். முதல் நாள் இரவு சதிர்க்கச்சேரி முடிந்தவுடன் அவள் நேரே வீட்டுக்கு வந்துவிட்டாள். முத்துத்தாண்டவனோடு தனித்துப் பேச சந்தர்ப்பம் இல்லை.

இரண்டு நாட்கள் கழிந்தன. முத்துத்தாண்டவன் வரவில்லை. வீட்டுக்குத் திரும்பியிருந்தால் அவர் இங்கு வராமல் இருக்கமாட்டாரே. ஒரு வேளை வீட்டுக்குத் திரும்பி வந்து உடல்நலம் இல்லாமல் தங்கிவிட்டாரோ’ என்றெல்லாம் நினைத்து நினைத்து குழம்பினாள் அலங்காரம். தன் நினைவையும், நெஞ்சத்தையும் அவனுக்கே அர்ப்பணித்து விட்டு, அந்த அர்ப்பணத்தையே தன் வாழ்வின் வெற்றியாகக் கொண்டாடி வரும் அவளுக்கு எதிர்பாரா அந்தச் சிறு பிரிவு பெருவேதனை அளித்தது.

மனத்தை மாற்றுவதற்காக வீணையை எடுத்துத் தனக்குப் பிடித்தமான ஒரு பாட்டைப் பாடத் துவங்கினாள். ‘பித்துப் பிடித்து ஏன் அலைகிறாய், பேதை நெஞ்சமே’ என்ற அந்த பாடல் வரி அவளது இதயத் துடிப்பின் எதிரொலி போலவே நளினமான ஒலித்தது. நேரே வடிவாம்பாளின் வீட்டிற்கே சென்று விசாரித்து வரவேண்டும் என்ற ஆவுல் தலை நீட்டிற்று. ‘ஊர் என்ன சொல்லுமோ’ என்ற அச்சம் இம்முறையும் எழுந்து கொழுந்துவிட்ட ஆவலை ஒடுக்கிற்று. கடைசியில், சிரமப்பட்டு அடக்கியும் அடங்காமல் மேலெழும்பும் அந்த ஆர்வத்தைத் தடுக்க இயலாதவளாக வீட்டை விட்டுக் கிளம்பினாள். தலையைக்கூட வாரிக்கொள்ளாமல், கட்டியிருந்த புடவையோடு, முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு வடிவாம்பாளின் வீட்டை நோக்கி நடந்தாள். ‘வடிவாம்பாளிடமிருந்து தனக்கு எத்தகைய வரவேற்புக் கிடைக்குமோ?’ என்று நினைத்தபோதெல்லாம் அவள் மனமும்