பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

193


லாந்திபுடுச்சி. அது கழுத்திலே சாயம் கரைச்சலேஞ்சிலே முடிஞ்சிருக்கக்கூடிய ரூபா ஆயிரத்தையும் அவிழ்த்துக்கிடுதோ, அந்த இளஞ்சிங்கத்துக்கு நான் வாழ்க்கைப்படத் தயார்னு பதினாறு நாட்டிலேயும் தண்டோரா போடச் செஞ்சேன். இம்மாங்கொத்த விஷப் பரிட்சையிலே என்னைத் தூண்டித் துருவி இறங்கவச்சதே என்னோட நேச மச்சான் முத்துலிங்கமேதான்! எனக்கு மனசொப்பிப் புடிச்சிப்பூட்ட இந்த மாங்குடிக்காரவுகளை என்னோட மனசுப்படி நான் கண்ணாலம் கட்டியிருக்கலாம். ஆனா விதி விளையாட நானும் ரோசத்தோட வெளயாட வாய்ச்சிச்சு. ஆனா எந்தக் காளையை மடக்கிப் பிடிச்சுக் கெலிச்சு, மஞ்சி விரட்டு மம்முதன் அப்படிங்கிற கியாதியைத் தட்டிக்கிடுறத்தோட, வீரத்தின் பேராலே ஒரு நல்ல பேரை உண்டாக்கி அதன் மூலம் உன்னையும் தட்டிக்கிடச் சொம்பனம் கண்டாளோ இந்த நேச மச்சானை, அந்தக்காளை - ஆமா என்னோட சொந்தக்காளை மண்ணைக் கவ்வச் செஞ்சிடுச்சி! ஆனபடியினாலே, நான் வச்ச ஆணைக்கு நானே தலைவணங்கிக் காட்டவும் துணிஞ்சி, விதி படிச்ச தீர்ப்புப்படிக்கு நான் முக்குடி முரடன் முத்தையனையே கைப் பிடிக்கவும் துணிஞ்சிட்டேன். என் விதி என்னோட! ஆகச்சே எனக்குக் குறுக்கு மறிக்க இனிம எந்த விதிக்குமே திராணி இருக்காதாக்கும்! ஆமா, இந்தச் செம்பவளம் சொன்னால் சொன்னதுதான்.

தோழிகள் விம்முகின்றனர்.

விடலைகள் சிலையாகின்றனர்.

“எலே! பவளப் பெண்ணே!”

செம்பவளம் ஏறிட்டுத் திரும்பினாள்.

ஓ! முத்துலிங்கம் மன்மதன்.

சிரிக்க வேண்டியவள், அழுகிறாள்.

பாவம் முத்துலிங்கம். செம்பவளத்தின் முரட்டுக் காளையில் மூர்த்தண்யமான தாக்குதலுக்கு இலக்கான ஆண்பிள்ளைச் சிங்கம் அதோ. ரத்தம் சொட்டச் சொட்டக் கிடக்கிறான்; புழுதியோடு புழுதியாகக் கிடக்கிறான். அவன் கண்களினின்றும் உதிரம் மட்டுந்தானா சிந்திச் சிதறிக் கொட்டுகின்றது?

அவன் அவளைக் கண்களால் பார்க்கவில்லை; நெஞ்சால் பார்த்தான். நல்ல ரத்தம் ஓடும் பாதத்திலே நெருஞ்சி முள் தைத்துவிட்டால், குருதி பூம்புனல் வெள்ளமாகப் பாய்ந்தோடுவது உண்டு. அந்தப் பாங்கில் அவனது இதழ்களிலிருந்து சொற்கள் பாய்ந்தோட வெள்ளப் பாய்ச்சலாகப் பாய்ந்தோடத் துடித்தன. ஆனால், உதிரக் கண்ணீர்தான் வெள்ளத்தின் சுழிப்போடு பீறிட்டது, வீரிட்டது. “பவளப்பெண்ணே!” விழித்தான்.