பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ந. முத்துசாமி

1936ஆம் ஆண்டு பிறந்த ந. முத்துசாமி தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள புஞ்சை என்றும் கிராமத்தைச் சேர்ந்தவர். எழுத்து பத்திரிகை மூலம் நவீன இலக்கியவாதியாக அறிமுகமானவர்.

‘நாற்காலிக்காரர்’ ‘சுவரொட்டிகள்’ ஆகிய இவருடைய நாடகங்கள் நவீன நாடகத்துறையில் முன்னோடி முயற்சிகள். தெருக்கூத்து, தமிழர்களின் பண்டைய தியேட்டராக இருந்திருக்க முடியும் என்பது இவர் கருத்து.

சென்னையில் ‘கூத்துப்பட்டறை’ என்ற அமைப்பில் மூலம் நவீன நாடகத்தை மேடையேற்ற முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வரும் கலைஞன்.

புதியதலைமுறை எழுத்தாளர் பலர் கையில் மெளனியின் பாதிப்பு இருந்தது உண்மையாயினும், மெளனியையும் தாண்டிய Anti-short story எல்லையில் எழுத முற்பட்டவர்களில் ஒருவராக ந.முத்துசாமியைக் குறிப்பிடலாம்.

‘சிறுகதை வடிவத்தை நன்றாய் அமைத்துவிடுவதில் முத்துசாமி ஓரளவு வெற்றியடைந்திருக்கிறார். மெளனியைவிட மிகவும் நுணுக்கமாகவே உளவியல் பகுப்பாய்வு விஷயங்களைக் கையாண்டிருப்பது கவனிக்கத்தக்கது. கதை சொல்லும் போது அதன் பின்னணியில் காணப்படும் விவரங்களை அடுக்கடுக்காக சில சமயங்களில் அதிகமாகவும், எடுத்துக் கூறுவது முத்துசாமி கதைகள் எல்லாவற்றிலும் காணப்படும் ஓர் அம்சம். அந்த அளவுக்கு மிஞ்சி விவரங்களை கதையில் நிரப்புவது வடிவத்தைப் பாதிக்கிறது...’ இப்படி சிட்டி-சிவபாதசுந்தரம் கூறுவது கவனத்துக்கு உரியது.

‘யார் துணை’ கதையில் ... புஞ்சையிலேருந்து ஆக்கூருக்குப் போற பாதை, குறுக்கு வழி. நிலமெல்லாம் வெடிச்சிக் கிடக்கு. எலி பிடிக்க என்று வரப்பெல்லாம் வெட்டிக் கெடக்கு. புழுதி உழுத நிலம் கட்டியும் முட்டியுமாய் பரவிக் கிடக்கு... ‘தான் பிறந்த ஊரைப் பற்றி சொல்லும் போது நாமும் அந்த ஊரில் கால் பதிக்கிற சந்தோஷத்தில்...’