பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

237


அம்பியின் அலறல் தெரு முழுவதும் கேட்டது. கண்டக்டரின் ஹோல்ட் ஆன் என்ற கத்தலும், அம்பியின் அலறலும் ஒரே சமயத்தில் ஒலித்தன.

பஸ் நின்றது... வண்டியிலிருந்து பிரயாணிகள் அவசர அவசரமாகக் கீழே இறங்கினார்கள்.

“ஐயோ பாவம், கால் சட்னியாயிடுத்தேய்யா?”

“முதல்லே ரத்தத்தை நிறுத்துய்யா... ஃபஸ்ட் எய்ட் பாக்ஸைக் கொண்டா சீக்கிரம்.”

“நோ... நோ... ஆஸ்பத்திரிக்கு எடுத்துண்டுதான் போகணும்... சின்னப்பையன்... என்னய்யா அநியாயம்...!”

கண்டக்டர் அம்பியின் கால்களை மெதுவாக விடுவித்தான். அம்பி அழவில்லை. அவனுக்கு நினைவு தப்பிவிட்டது.

அப்பொழுது திடீரென்று எல்லாருடைய நெஞ்சையும் பிழிந்தெடுக்கும்படியாக ஓர் ஓலம் கேட்டது. கண்டக்டர் பையனைத் தூக்கிப் பஸ்ஸில் வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமா என்று யோசித்தவன், திடுக்கிட்டு நின்றான்.

“அம்பி... அம்பி... நான் என்னடா செய்வேன்... உன்னைத்தானேடா நான் நம்பிண்டிருந்தேன்...”

“யாரு இவங்க?... பையனோட அம்மாவா?”

“ஆமாம்...”

“பெரியம்மா, கொஞ்சம் நகருங்க. ரத்தம் போய்கிட்டே இருக்கு... பஸ்ஸிலே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போறோம். மத்ததெல்லாம் அப்புறம் பேசிப்போம்...”

“எங்கேய்யா அவசர அவசரமா ஓடறே? பையன் பேரிலே பஸ்ஸை ஏத்திட்டுத் தப்பிச்சுக்கலாம்னு பாக்கறயா? தோப்பணில்லாத பிள்ளை, ஒரு ஏழைக் குடும்பத்தோட வயத்தலே அடிச்சிட்டியே, உருப்படுவியா?...”

“ஐயரே, நீங்க என்னய்யா வேணும் இந்தப் பையனுக்கு? சொல்லறத்தை கேளுங்க... உங்களுக்குப் பையன்தானே முக்கியம்?... சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போவோம்; அப்பறம் சத்தியமா சொல்றேன், நீங்க என்ன சொல்றீங்களோ அதைச் செய்யறேன்... நானும் பிள்ளை குட்டிக்காரன்... வேணும்னு இந்தப் பச்சைப் புள்ளை மேலே பஸ்ஸை ஏத்தலே...”

“பையன் திண்ணையிலே உட்கார்ந்திண்டிருந்ததை நீ பாக்கலே? கண் அவிஞ்சா போச்சு? காலைச் சட்னியாக்கிட்டியே... இந்த அம்மாவுக்கு ஒரு வழி சொல்லிவிட்டுப் போ...” -

டிரைவருக்குக் கோபத்தினால் முகஞ் சிவந்தது. நன்றாக அடிபட்டுக் கிடக்கும் பையனை வைத்துக் கொண்டு வியாபாரம் பேசுகிறாரே, இவர் யாராக இருக்கும்?

“இந்தப் பையனுக்கு நீங்க என்ன வேணும்?”