பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

சோலை சுந்தரபெருமாள்


இல்லை. பையன் எப்படி நடக்கப் போகிறான்? தகப்பன் இல்லாத பிள்ளை, இவனைத்தான் நம்பிக் கொண்டு இருப்பதாகத் தாய் புலம்புகிறாள்!

“பெரியம்மா, உங்களுக்கு வேறு குழந்தைங்க இல்லையா?” என்று கேட்டான் வேலு.

அம்பியின் அம்மா பதில் கூறவில்லை. கண்களை மூடிக்கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தாள். பதில் வராததைக் கண்டு வேலு திரும்பிப் பார்த்தான். அவள் என்ன செய்கின்றாள் என்றறிந்ததும் தன் கேள்வியை மீண்டும் வற்புறுத்தவில்லை.

ராஜூ சொன்னான். “பையனை ஆஸ்பத்திரியிலே சேத்தப்புறம் முதலாளிக்கு அங்கேயிருந்து ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்லிடுவோம். போலீஸை அவர் பாத்துப்பாரு... என்னன்னே?”

வேலு பேசாமலிருந்தான். இந்த அம்மாவுக்கு வேறு குழந்தைகள் இல்லையோ? அப்படி இல்லையென்றால், இதைக் காட்டிலும் துயரம் இந்த அம்மாவுக்கு வேற என்ன வேண்டும்? முதலாளியிடம் சொல்லி நஷ்ட ஈடு வாங்கித் தரமுடியுமா? “ஒண்னாம் நம்பர் கஞ்சன், குடிக்கும் கூத்திக்கும் செலவழிப்பான், நஷ்டஈடா தரப்போகிறான்?

தானும் ‘பிள்ளை குட்டிக்காரன்’ என்று வேலு சொன்னது வாஸ்தவந்தான்... ஒன்பது குழந்தைகள்... பெரியவளுக்குப் பதினெட்டு வயது. கல்யாணம் செய்தாக வேண்டும். ஆறு பெண்கள், மூன்று பிள்ளைகள். கடைசிக் குழந்தை பெண்; இரண்டு வயதாகிறது...

ராஜூவையே தன்னுடைய மூத்த பெண்ணுக்கு வளைத்துப் போடலாமென்பது வேலுவின் திட்டம். பிச்சுப் பிடுங்கலில்லை. ஒரே பிள்ளை... அம்மா கிடையாது, அப்பாதான். அவரும் வைப்பாட்டியோடு தஞ்சாவூரில் இருந்து வருகிறார். ஆனால் இந்தக் காலத்து வாலிபர்களைப் போல், ராஜூவுக்கும் நெஞ்சில் ஈரம் இல்லையே என்ற சந்தேகம் வேலுவுக்கு உண்டு. இன்று உறுதியாகிவிட்டது. முதலாளி, போலீஸ், முதலாளி, போலீஸ்! என்று அரற்றிக் கொண்டிருக்கிறானே தவிர, ஒரு சின்னப் பையனுக்கு அடிபட்டுவிட்டதே என்ற வருத்தம் அவனுக்குக் கொஞ்சம் கூட இல்லை...

ஆஸ்பத்திரி வந்துவிட்டது... ராஜூ இறங்கி உள்ளே போய் ஸ்டெரச்சருடன், இன்னொரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தான், அம்பியின் அம்மா வீறிட்டு அழுதாள். .

வேலு அவளருகில் போய் நின்றான். “பெரியம்மா, உங்களுக்குத் தைரியம் இல்லேன்னா, வண்டியிலேயே இருங்க... நான் உள்ளே போய் டாக்டரைப் பாத்துட்டு வந்து சொல்றேன்...”