பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

245


அவர்கள் கூட ராஜூ குறிப்பிட்ட, வக்கீல் குமாஸ்தா பாலு அய்யரும் வந்திருந்தார். அவர் ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

“ஏதோ தவறு நடந்துட்டுதுங்க... பையன் திடீர்னு காலைத் தொங்கப் போடுவான்னு டிரைவர் எதிர்பார்க்கலே...”

ஓரமாக நின்று கொண்டிருந்த பாலு அய்யர் அப்பொழுது அங்கு வந்தார். முதலாளி சொன்னது அவர் காதில் விழுந்திருக்க வேண்டும்.

“பையன் திடீர் என்று காலைத் தொங்கப் போடலை, தொங்கப் போட்டிருந்த கால் மேல்தான் பஸ் மோதிட்டு... அவ்வளவு தூரம் ரிவர்ஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்றார் அவர்.

“நீங்க யாரு?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“வக்கீல் குமாஸ்தா.”

இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்து புன்னகை செய்தார்.

அந்தப் பெண்ணின் கணவன் பேச ஆரம்பித்தான். “இதோ பாருங்க... என்னோட மாமியாருக்கு இந்தப் பையன் ஒரே பிள்ளை. ஒரு பொண்ணு, ஒரே பிள்ளை அவ்வளவுதான்... அவளை நம்பித்தான் அவ இருக்கா, படிப்பிலே மகா கெட்டிக்காரன், பள்ளிக்கூடத்திலே விஜாரிச்சுப் பாருங்க...”

“இன்னி சாயங்காலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்களேன்... எல்லாம் பேசிக்கலாம்...” என்றார் இன்ஸ்பெக்டர்.

ரவி அப்பொழுது ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தான்.

“எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டான்.

ரவி, பையனோட அம்மா யாரு?” என்று வினவியவாறு சுற்றுமுற்றும் பார்த்தான்.

அம்பியின் அம்மா எழுந்து வந்தாள்.

“நன்னாத்தான் அடிபட்டிருக்கு... நான் என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன்... இரண்டு காலும் ரொம்ப மோசமாத்தான் இருக்கு...” என்றான் ரவி.

“உயிருக்கு ஆபத்தில்லையே?” என்று கேட்டான் முதலாளி.

“அதில்லே... பட்... போத் லெக்ஸ் மே கோ அவுட் ஆஃப் ஆக்ஷன். திஸ் ஈஸ் டு பாட்! ஆல்ரைட் இன்ஸ்பெக்டர், நான் என் ரிபோர்ட்டைத் தரட்டுமா?”

இன்ஸ்பெக்டர் முதலாளியைப் பார்த்தார். முதலாளி டாக்டரிடம் சொன்னான்; “நான்தான் வண்டியோட ப்ரொப்ரைட்டர்... வந்து...வந்து...கொஞ்சம் தனியா பேசலாமா உங்களோட?”