பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

251



“கொடுத்துட்டு, பைப்புத் தண்ணிய புடிச்சிக்கிட்டு போவவா”

“வூட்டுக்குக் கொண்டு போறதுக்குள் ஆறிப் போயிடுமே”

“சட்டியில ஊத்தி அடுப்புல வச்சு ஒலயப் பத்த வச்சா ஒரு நிமிஷத்துல சுட்டுடும்”

“பொக நாத்தம்ல அடிக்கும்”

“எந்த நாத்தமா இருந்தா என்ன. சூடா சக்கரத் தண்ணி தொண்டையில போவுலனா அப்பாவும், அம்மாவும் எழுந்திரிக்க மாட்டாங்க”

“பழகிட்டா அப்படித்தான். நீ குடிக்கிறது உண்டா”

“வே...” முகம் கழித்துக் கொண்டாள்.

“சரி. ஒப்பன் கிட்ட சொல்லு வயசுக்கு வந்ததும் தேவர் தாத்தாவைத் தான் கட்டிக்குவேன்னு, என்ன”.

“கெளவனையா” பழிப்புக் காட்டுவிட்டு அவள் நடந்தாள். போலிருந்தது. தேநீர் குடித்து சரியாக பத்து நாட்களாயின. தினமும் அதிகாலையில் குளிரைப் பொருட்படுத்தாமல் நல்லதம்பி தேநீர் கடையில் போய் நிற்பார். அவன் அடுப்பைப் பற்ற வைத்து, பால் சட்டியைத் தூக்கி வைத்து, பாய்லரில், தண்ணீர் கொதிக்கும் வரை அமைதியாக நின்று கொண்டிருப்பார். நல்லதம்பி போடும் முதல் தேநீர் அவருக்குத்தான். முதல் போனியே கடன்தானா என்று சகுனம் பார்க்காமல் “தாத்தா இந்தா” என்று டீ கிளாசை நீட்டுவான்... கை பொறுக்காத சூட்டிலும் இரு கைகளாலும் கிளாசைப் பிடித்துக் கெர்ண்டு ஒரு ஓரமாகச் சென்று உட்காருவார். கிளாசை முகத்துக்கருகே கொண்டு போய் ஆவியை வாயில் இழுத்து நெஞ்சுக் கூட்டுக்குள் அடைத்து பின் மெதுவாக வெளியேற்றுவார். இவ்வாறு நான்கைந்து தரம் செய்தபின் நெஞ்சு பாரம் இறங்கியது போல உணர்வார். பின் மெதுவாக உதட்டருகே கிளாசைக் கொண்டு போய், டீ ஒருவாய், ஆவி ஒருவாய் என்று சூடு ஆறுமுன் உள்வாங்கிக் கொள்வார்.

பின் எழுந்து தலை முதல் முழங்கால் வரை வேட்டியால் போர்த்திக் கொண்டு, மாரியம்மன் கோவில் காட்டுக் கருவை தோப்புக்குள் போய்விட்டு நேராக பெரியகுளம் நோக்கி நடப்பார். கருவைக் குச்சியை ஒடித்து, விழாமல் இருக்கும் எட்டுப் பற்களையும் தேய்த்து சுத்தம் செய்து முகம் கழுவி நெஞ்சுச் சளியை காறி, கனைத்து, இறுமி வெளியேற்றி புத்துணர்வுடன் மீண்டும் நல்லதம்பி டீக்கடைக்கு வருவார். சூடாக இன்னொரு டீ குடித்து விட்டு வீட்டிற்குப் போவார். இப்படி தினமும் பழகிய உடம்பு.

மாச முதல் வாரத்தில், ஒரு நாள், போஸ்ட் மேன் நயினார் தேவரைத் தேடி நல்லதம்பி தேநீர்க் கடைக்கு வருவார். அந்த நேரத்தில் தன்னை எதிர்பார்த்து அவர் அங்கே குந்தியிருப்பார்