பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

சோலை சுந்தரபெருமாள்


என்று நயினாருக்குத் தெரியும். தேவரிடம் கைநாட்டும், நல்லதம்பியிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு, பேரன் அனுப்பிய பணத்தை நயினார் தருவார். எண்ணிப் பார்க்காமல் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு, தனக்கும் நயினாருக்கும் ஸ்பெஷல் டீ போடும்படி தேவர் கூறுவார். டீயைக் குடித்துவிட்டு, தேவரிடம் ‘கிப்ட் பணம்’ எதுவும் வாங்காமல் தபால் கட்டுகளை எடுத்துக்கொண்டு நயினார் புறப்பட்டு செல்வார்.

கடைசியில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, மடியை அவிழ்த்து நூறு ரூபாய் நோட்டு அல்லது இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளாய் எடுத்து நல்லதம்பியிடம் தேவர் நீட்டுவார். மனக்கணக்காகப் போட்டு உத்தேசமாக இத்தனை தேநீர் என்று கூட்டி, பணத்தை எடுத்துக் கொண்டு மீதத்தை நல்லதம்பி தருவான். அதை வாங்கி மடியில் இருக்கும் பணத்தோடு சேர்த்துக் கொண்டு நேராக வீட்டிற்குச் சென்று பேரனின் மனைவியிடம் ஒப்படைப்பார். மகராசி அதை வாங்கி வைத்துக் கொள்வாளே தவிர எவ்வளவு பணம் வந்தது எவ்வளவு அதில் இருக்கிறது என்று ஒரு வார்த்தை இதுவரை கேட்டதில்லை.

பேயாண்டித் தேவருக்கு வேறு செலவுகள் என்றும் இல்லை. பீடி, சுருட்டுகளில் பழக்கம் இல்லை. வாலிய பிராயத்தில் கள் குடித்ததுண்டு. மருங்கூர் ஐயரிடம் பண்ணை ஆளாக இருந்தபோது மாதம் இரண்டு கலம் நெல்; மூன்று ரூபாய் கூலி. வேலை இல்லாத நாட்களில் கையில் நாலனா எடுத்துக்கொண்டு மானாம்பேட்டைக்குப் போவார். ஒரு படி கள் ஓரணா. அதிகமாகப் போனால், அதுவும் கள் புளிப்பு இல்லாமலிருந்தால், இரண்டு படி கள் குடிப்பார். ஓரணாவிற்கு வறுத்த கருவாடு. அதோடு சரி. வீடு திரும்பிவிடுவார். நாடு சுதந்திரம் அடைந்த நேரம். சாராயக்கடைகளை எடுத்துவிட்டு ஊருக்கு ஊர் தேநீர் கடைகளைத் திறந்தார்கள். கள் பழக்கத்திலிருந்து தேநீருக்குத் தாவினார் தேவர். நாளாக நாளாக, தேநீர் இல்லாமல் பொழுது விடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

வீட்டிற்குப் போய் ஒரு வாய் நீராகாரம் குடிக்கலாம் என்று எண்ணினார். இந்தக் குளிரில், நெஞ்சில் சளி பின்னிக் கொண்டிருக்கும் போது நீராகாரம் உள்ளே போனால் காய்ச்சல் வந்து படுத்துக்கொள்ள வேண்டி வரும் என்ற நினைப்பு வந்தது. அந்தப் பய வர்ற வரைக்கும் இங்கேயே குந்தியிருப்போம் என்று முடிவு செய்தார்.

பூவரசு மரத்திலிருந்து பனித்துளி மழை போல் கொட்டிக் கொண்டிருந்தது. பனியின் அடர்த்தி இன்னும் குறையவில்லை.

தேவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

பயல் இன்னும் வரவில்லை. அவனுக்கு வேறு ஏதும்