பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

253


அவசர ஜோலியா வர்றேன்னு சொல்லிப்புட்டு வராம இருக்க மாட்டான் பாப்போம்.’

அவன் வந்தாலும் நல்லதம்பி கடையில் போய் தேநீர் குடிக்கக்கூடாது என்று முடிவு செய்தார். தாத்தா மனோபலம் இல்லாத ஆள். ஒரு பத்துநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாம வந்திட்டாரு என்று நெனைப்பான். “பேசாம துறையூருக்கு போற வழியில வேற கடையில ஒன்னுக்கு ரெண்டு டீயா குடிக்கனும் என்று எண்ணினார். இன்னொரு பக்கம், மனசு ஏன்தான் இந்த அல்லாட்டம் போடுது. எவ்வளவு வைராக்கியம் காத்த மனசு என்ற நினைப்பும் வந்தது.

‘முடியாத காலத்துல உசிர வச்சிக்கிட்டிருக்கிறதே பெரிய கொடும. நாலு காசு சம்பாதிக்க முடியாம போனாப் பொறவு எதுக்காவ உயிர் வாழனும். பெத்த புள்ளைங்களே பாரமா நெனப்பாங்க. பேரப் புள்ள நெனக்கிறதுக்குப் கேக்கணுமா. அயோக்கியப் பய’

மூக்கை உறிஞ்சி சிந்தினார். வேட்டி முனையில துடைத்துக் கொண்டார். தலை கனம் அழுத்தியது.

‘பய மவன எப்படி வளத்தேன். அப்பனும், ஆத்தாவும் காலராவுல போன பின்னாடி, நெஞ்சிலும் தோள்லயும் போட்டு, குருவிய வளக்கிற மாதிரி ஆளாக்குனேன். உத்தூர் வாத்தியார் கால்ல விழுந்து கையில விழுந்து பள்ளிக்கொடத்துல சேத்து, என் வாயக்கட்டி வயத்தக்கட்டி படிக்க வச்சேன். என் கோவத்தத் தவிர எல்லாத்தையும் வித்து, குருக்கத்திக்கு அனுப்பி, வாத்தியாராக்கினேன். இன்னிக்கு இவன் வாங்குற சம்பளம் ரெண்டாயிரம் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க. ஒரு நாள் இவ்வளவு சம்பளம் வாங்குறேன்னு இந்தப் பய சொன்னதுண்டா.’

‘என்னா கெலவாடி உக்காந்திடிச்சு சாலையில் போய்க் கொண்டிருந்த குறக் கோவாலு பொஞ்சாதி கேட்டாள். சீவி முடித்து, ஒருருபாய் அகலத்திற்குக் குங்குமப் பொட்டு வைத்து, நெற்றியில் வழிந்த எண்ணை பளபளக்க அவள் நடந்த நடை.

‘எங்கடி போயிட்டு வார’

‘சிம்பு தீந்து போச்சு. மூங்கி மரம் வாங்கணும். நரிமணம் போனேன், நாயிடு இல்ல, திரும்பி வாறேன்.’

ஆளப்பாத்தா மூங்கி மரம் வாங்கப்போன மாதிரியா இருக்கு... இம். தேவர் இழுத்தார். தொடர்ந்து பேச முடியாமல் சளி அடைத்தது. ஆனாலும் அவள் வேறு மாதிரி புரிந்து கொண்டாள்.

‘போயா. வயசானாலும் புத்தி மட்டும் மாறல’ கோணல் சிரிப்புடன் நகர்ந்தாள்.

தேவருக்கு மீண்டும் பேரன் மீது இருந்த ஆத்திர உணர்வுகள் கொப்புளித்தன.