பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

255


“டே பாடம் ஒழுங்கா படிச்சியா”

“ஓ”

“தம்பிப் பய அழுதானா?”

“இல்ல”

“வெளயாட்டு கிளயாட்டுனு மரம் மட்டையில ஏறாதே, என்ன. இங்கிலிசு நல்லா படிக்கிறியா?”

“ரொம்ப நல்லா புரியுது தாத்தா. நானும் அப்பா மாதிரி வாத்தியாரா ஆவப் போறேன்.”

“சரி சரி ஆவு. ஆனா கடைசி காலத்துல ஒப்பன கவனிக்காம அம்போன்னு வுட்டுடாதே, என்ன”

“போ, தாத்தா. சம்பளம் வாங்குனா அப்பன் கிட்ட தரமாட்டேன். அப்பாவ எனக்குப் புடிக்கல. ஒனக்கு நெறைய டீ வாங்கித் தருவேன்.”

“அடே கண்ணா. நீ தாண்டா என் மொவன்.” குனிந்து கொள்ளுப்பேரன் முகத்தில் முத்தமிட்டார்.

வீட்டு வாசலில் பேரனின் மனைவி உட்கார்ந்திருந்தாள். முகத்தில் வாட்டம்.

“தாத்தா, எங்க போனிங்க காலயில இருந்து உங்களக் கானோம் உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.

“சும்மா பொழுது போகணும்ல. ரோட்டடியில போயிருந்தேன்.”

“பத்து நாளா ஆளே சரியில்ல. ஒம் பேரன் வந்துட்டுப் போனதுல இருந்து முகம் வாடிக்கிடக்கு”.

“அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.”

“டீ செலவு செஞ்சதுக்காவ திட்டினார்னு தானே வருத்தம். சொல்லணும்னு நான் ஒன்னும் சொல்லல. வரவு செலவு எழுதி வச்சிருந்த நோட்ட அவரு படிச்சிட்டாரு”

“அதனால பரவாயில்லமா’ தேவர் குரல் நடுங்கியது.

“இன்னில இருந்து நாமே டீ போட்டுத் தருவம்னு அரமாணி பால் வாங்கி வச்சேன். உங்களக் காணோம். காச்சி வச்சிருக்கேன். டீ போட்டுத் தரவா அவள் குரல் தழுதழுத்தது. அவளுக்குப் பின்புறம் நின்றிருந்த கொள்ளுப் பேரன் வேண்டாம் என்பது போல சைகை செய்தான். நான் சம்பாரிச்சு ஒனக்கு நெறைய வாங்கித் தருவேன்’ என்று அவன் விழிகள் கூறின. தேவரின் மனசுக்குள் ஆயிரம் மத்தாப்புக்கள்.

“வேண்டாம்மா. பால ஒம் புள்ளைங்களுக்குக் கொடு.” உயிர் இருக்கும் வரை இனி தேநீர் குடிப்பதில்லை என்ற வைராக்கியத்துடன் தேவர் கூறினார். கொள்ளுப் பேரன் முகத்தில் ஆனந்தக்களிப்பு; அவர் நெஞ்சுக்குள்ளும்.