பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ம. ராஜேந்திரன்

ஞ்சை - எடஅண்ணவாசலைப் பிறந்த மண்ணாகக் கொண்டவரான ம.ரா. வின் சிறுகதை வெளிப்பாட்டின் சிறப்பம்சம் சொல் சிக்கனம். செற்களை இவர் விரயம் செய்வதேயில்லை.

தான் பார்த்த - தெரிந்துக் கொண்டுள்ள - அனுபவித்த வாழ்க்கையை ஒரு வட்டத்திற்குள் கொண்டு வருவதில்லை. கதைக்கருவிற்கு ஏற்ப பன்முகப்பட்டு வெளிவரும். பலகுரல் தன்மை ஒரு படைப்பில் இருந்தால் தான் அது இலக்கியமாகும் என்ற நிலைபாட்டைக் கொண்டவர்.

“இவரது கதைகள் கிராமப்புறங்களில் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்கள் பக்கம் நிற்கின்றன. நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையை அனுதாபத்தோடு சித்திரிக்கின்றன. அதிகாரத்துவப் போக்கை அம்பலப்படுத்துகின்றன. இத்தகைய கதைகள் இன்றைய காலக்கட்டத்துக்குத் தேவையானவை” என்று முனைவர் கோ. கேசவன் மதிப்பீடு செய்துள்ளார்.

“...பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலையொட்டியதாகவே நடை உள்ளது. பெரும்பாலும் சின்னச்சின்ன சொற்கள் கவிதை மாதிரி சுண்டக் காய்ச்சிய உரைநடை. கதை நிகழ்வுக்கு அடர்த்தியைக் கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இயற்கை வருணனைகள். இப்படி எழுத்துக்களில் எங்கேயும் துருத்திக் கொள்ளாது தன்னைக் கரைத்துக் கொள்கிற படைப்பாளி படைப்பு முழுக்க நிறைந்திருப்பான். இந்தச் சூட்சுமம் தெரிந்திருப்பது தான் இவரது வெற்றி” என்று வளர்ப்பு தொகுதிக்கு மதிப்பீடு செய்திருக்கும் கே.எம். வேணுகோபால் சொல்லிருப்பதை ம.ரா. வின் படைப்புகளைப் படிக்கும் போது நாமும் உணரலாம்.