பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

261


இல்லை. சில நாள் அவனையும் கூடவே அழைத்துக் கொண்டு போயிருக்கார். கடன் கிடைத்தால் உடனே போய் துணி எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையில் அவனும் அப்பாவுடன் நடந்திருக்கான். ஆனால் கடைசி நாள் வரைக்கும் அலைய வைத்துக் கழுத்தறுத்துவிட்டனர்.

முருகேசன் வெடிச்சத்தத்தில் விழித்தபோது தான் அவன் தூங்கிப் போனதே தெரிந்தது. பட்டாசுப் பையைப் பார்த்தான். பத்திரமாக இருந்தது. எழுந்து நடந்தான்.

“வடுவூர்... மன்னார்குடி... வடுவூர்.. மன்னார்குடி” காக்கிச் சட்டைக்காரர் கூப்பாடு போட்டார். முருகேசன் ஓடி வந்து ஏறிக் கொண்டான். பஸ்ஸில் கூட்டம் இல்லை. டிரைவரும் கண்டக்டரும் நெற்றியில் திருநீறும் தீபாவளி மகிழ்ச்சியுமாய் இருந்தனர். டிரைவருக்கு மேலே இருந்த சாமிப்படம் ஊதுவத்திப் புகையில் மறைந்தது.

பஸ் வேகமாகச் சென்றது. ஐப்பசி குளிர் ஊசியாய் குத்தியது. பஸ் ஸ்டாண்டு தரையில் படுத்துக் கிடந்ததும் பஸ் வேகமும் அவனுக்கு உடம்பெல்லாம் நடுங்கின. கையையும், காலையும் கட்டுப்படுத்திக் கொண்டாலும், ஈரக்குலையே உள்ளுக்குள் நடுங்கியது. பல்லைக் கடித்துக் கொண்டான், முடியவில்லை.

வெளியே தீபாவளி வானத்தில் வெளிச்சப்பூக்கள் சிதறின.

வடுவூர் வந்தது. இறங்கினான். இப்போது இன்னும் நடுங்கியது. டீ கடையைத் தேடினான். டீ கடைகள் தனியாக இல்லை. இரவில் அவையும் வீடுகளாகவே இருந்தன. அங்கேயும் கொண்டாட்டம் தான். நடந்தால் நடுக்கம் சரியாகிவிடும் என்ற நம்பிகையில் ஊரை நோக்கி நடந்தான். ‘மூணு மைல் நடக்கணும்’ மனசுக்குச் சொல்லிக் கொண்டான். பட்டாசுப் பையைக் கைமாற்றிக் கொண்டு நடையில் வேகம் கூட்டினான்.

வழியெங்கும் வீட்டு வாசல்களில் மத்தாப்பு வெளிச்சங்கள். புதுத்துணியில் குழந்தைகளும், பெரியவர்களும் சிரித்து நின்றனர். . அவன் அப்பா இந்த வருசம் யாருக்கும் துணி எடுத்திருக்க முடியாது. அதனால் தீபாவளி முடிந்த மறுநாள் அவன் பள்ளிக்கூடம் செல்ல வேண்டியிருக்காது. எல்லாரும் புதுச்சட்டையில் பள்ளிக்கூடம் வரும்போது அவன் மட்டும் பழைய சட்டையில் போவது கஷ்டம். அவன் அப்பாவே அவனைப் போக வேண்டாம் என்பார். அதில் அவனுக்கு மகிழ்ச்சி இருந்தது. காலையிலேயே தூண்டிலை எடுத்துக்கொண்டு புறமடுவுக்கோ, உப்புக் குளத்துக்கோ, ஒட்டக்குளத்துக்கோ