பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

269


எல்லாரும் ஒனக்குப் பைத்தியம்ங்கிறா. ‘யாராவது இப்டி ஊருக்கு வெளியே மூங்கித் தோப்புக்குள்ள சுடுகாட்டுக்குப் பக்கத்துல தனியாப் போய் ஒரு பொண்ணு தானே வீடு கட்டிண்டு இருப்பாளோ?! அப்படீன்னு பேசாதவளேயில்ல. எல்லாரும் என்னதான் பேசறா? நீயா தான் லெப்ரசி ஆஸ்பத்திரிலருந்து வந்து அஞ்சு வருஷமா இதே மாதிரிதான் இருக்கெ. உனக்கு எல்லாரு மாதிரியும் இருக்கணும்னு ஆசையே கிடையாதுன்னு நல்லாவே தெரியும். ஏதோ பெரிய தியாகின்னு ஒனக்கு நெனப்பு! என்னையானும் நினைச்சுப் பாக்கிறியா? நீ ஒங் குழந்தையை என்னிக்காணும் பார்க்கணும்னு எங்கிட்ட கேட்டுருக்கியா? நானா அழைச்சுண்டு வந்தாக் கூட யாரோ அன்னியப் பெண்ணப் பார்க்கிற மாதிரி பாக்குற...” என்றெல்லாம் ராகவன் தொடர்ந்து பேசிக்கொண்டே போனான். அவன் பேச்சுகூட அவளுக்கு கசந்தது. அவன் முகத்தைப் பார்த்துக் காறித் துப்பினால் என்ன, என்று கூடத் தோன்றியது. எட்டு வருடங்களுக்கு முன்னால் இருந்ததைப் போலத்தான் இப்பமும் ராஜா மாதிரி இருக்கிறான் ராகவன். கை நிறைய சம்பாதிக்கிறான். ஜாக்கிரதையாய் சேமிக்கிறான். ஊர் மெச்ச, உலகம் மெச்ச குழந்தை வளர்க்கிறான். குழந்தை! அவள் பெற்றெடுத்தக் குழந்தையா அது!? பிறந்ததுமே அவளுக்குத் தோலெல்லாம் ஒரு நமைச்சலை உருவாக்கியது அந்தக் குழந்தைதான். அந்த அரிப்பு அவளைத் தொட்ட போதே அவளுக்கு இருந்ததுதான். குழந்தை காய்ச்சல் அனல் பறந்த போது டாக்டர்கள் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டாமென்று சொன்னார்கள். முதல் நாளிலேயே அவளுக்கும், அவள் குழந்தைக்கும் அரிப்பும், நமைச்சலும் உடம்பெல்லாம் பூரித்து விட்டது. சிவப்பு சிவப்பாய் தடிப்புகள் உடலெங்கும் பூரி இருந்தது. கோடு கோடாக வெட்டு விழுந்தது போல் தடிப்புகள், சினைப்புகள், தஞ்சை, மதராஸ், டெல்லி எல்லா டாக்டர்களும் “மதர் அலர்ஜி” என்றார்கள். அது தாய்க்கும், குழந்தைக்கும் இடையே முதல் திரையாக விழுந்தது.

அவளுக்கு ‘மதர் அலர்ஜி’ என்று கேள்விப்பட்டபோது எல்லோரும் வியப்பால் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்! குழந்தைக்கு பேரு என்ன வைக்கிறதுன்னு கேட்டப்போ அவ சொன்னா “மைத்ரேயி”. ஆனால் பேரு யாருக்கும் புடிக்கல. அவா எல்லாரும் சுசீலான்னு கூப்பிட்டா. ராகவன் மகாலட்சுமின்னு கூப்பிட்டான். ஸ்கூல்ல அவளுக்குப் பேரு அஞ்சனா. எப்பவும் அம்மாகிட்ட வரமாட்டா. வரக்கூடாது. அம்மாவுக்கு உடம்பெல்லாம் தடிச்சு தடிச்சு போய்டும். புள்ளிப் புள்ளியா சினைப்பு தட்டிடும். ஆனாலும் ‘குழந்தை அம்மான்னு கத்தின்டே ஓடி வந்து கட்டிக்காதோ? மைத்ரேயின்னு வாய் நிறைய கூப்பிடணும்’ன்னு லோச்சனாவுக்கு முன்னல்லாம்