பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

275


அவளை சிகிச்சைக்கு அழைக்கும் போதெல்லாம் அவள் கணவனுக்கு அடங்கிய அமெரிக்கையானப் பெண்ணாக இருக்கும்போது, யாருக்கும் ஆச்சரியமாய் இருக்கும். இவளையா, பைத்தியம், தொழுநோயாளி என்றெல்லாம் சொல்கிறார்களே?! என்று விபரீதமாய் இருக்கும். மெல்லிய கலர்களில் அவள் உடுத்தும் புடவைகள் ராகவனுக்குப் பிடிக்காது. அவளது ஓவியங்கள் அவனுக்குப் பயமுறுத்தல்களாக இருக்கும். இரண்டு பேரும் தனியாக இருந்தால் பேசுவதேயில்லை. ராகவனை ராணி ஏறெடுத்துப் பார்ப்பதுடன் சரி. ஒவ்வொன்றாய் ஐந்து வருடங்கள் கழிந்த போது ராகவனின் தியாகம் அவளுக்கு புரியிற மாதிரிதான் இருந்தது. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்கிற தியாகம் அந்த கிராமத்துக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது போல அவளுக்கு பயமாக இருந்தது. ராணி பயப்படுவாளது பயம் இப்படித்தான் ஆரம்பித்தது. பயத்தைப் போக்கிக் கொள்ளத்தான் கும்பகோணத்துக்குப் போனாள். முத்துப்பிள்ளை மண்டபம் ஆஸ்பத்திரிக்கு அவள் சிகிச்சைக்காக போவதாக அம்மா, அப்பா, மன்னிகள் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ராகவனைப் பார்த்து எல்லோரும் பரிதாபப்பட்டார்கள். அவன் வயதில் அவன் செல்வத்துக்கு, அவன் அழகுக்கு அவன் உத்யோகத்திற்கு அவன் செல்வாக்குக்கு அவன் இப்படியெல்லாம் ஏகாங்கியாய் இருக்க வேண்டியதில்லை. ஆனால் அவனது ரகசியம் முழுவதும் லோச்சனா மட்டுமே அறிவாள். ஆனால் லோச்சனா சொல்லமாட்டாள். கை நீட்டி வாங்கமாட்டாள். கெஞ்சி நிற்கமாட்டாள்.

தன்னந்தனியே வினோதமான உருவத்துடன் அந்தக் கிராமத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு யாரும் வேண்டாம். அவள் ஒரு தாய் இல்லை. யாருக்கும் அவள் உறவில்லை. யாருக்கும் அவள் தமக்கையில்லை, தங்கையில்லை, மனைவி இல்லை. அவள் வெறும் மனுஷி!? ஐந்தாறு வருடங்களாக அந்த மண்ணில் உழலும், சாதாரணமான மனிதர்களோடும், மனுஷிகளோடும் அவளும் ஒருத்தி. அவளே கல் அறுத்து பெரிய பெரிய செங்கற்கல்லாய்ச் சுட்டு அவளே வினோதமாய்கட்டிய அந்த வினோதமான வீடும் லோச்சனாவைப் போலவே, முரட்டுத்தனமாய் கவலையற்று இயற்கையின் சீற்றங்களை எதிர்த்து நின்றது? வீட்டைச் சுற்றிலும் திருகு கள்ளிச் செடிகளை வைத்து வளர்த்திருந்தாள் லோச்சனம். மணல் மேடுகளில் உருண்டைக் கள்ளி பயிரினங்களை வளர்த்திருந்தாள். வினோதமான கேக்டஸ் இனங்கள் சிவப்பு, நீலம், பூக்கள் முள்ளுக்குள்ளிருந்து புஷ்பங்களை புதுப்பித்து வளர்த்திருந்தன.