பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

283



ஒருத்தரப் போல வேலத் தலைப்புக்குப் போய் நெழுப்பிக்கிட்டு நிக்கிறவளா பாக்கியம்? முத்தண்ணன் வரைக்கும், அவள் சோம்பிக்கிட்டு நின்னு ஒரு நாளும் பாத்ததே இல்லையே. ஒழைச்சு சம்பாத்தியம் பண்ணுறதே போதும் எத்தி வாங்கிட்டுப் போற காசா ஒட்டப் போவுது? எப்பயும் படு சுறுசுறுப்பா நின்னு கை வேலயப் பாத்து முடிச்சுட்டு மறு வேலப் பாத்து தான் பழக்கப்பட்டவள். அவளுக்கு ஈடா நின்னு வேலை செய்ய ஆம்பளையே தடுமாறிப் போயிடுவானுங்க.

ஆஞ்சி, ஓஞ்சி வந்து எப்பப் படுத்தாலும் தூக்கம் எங்க எங்கன்னு தான் நிக்கும். அப்புடி அடிச்சுப் போட்டது போல தூங்கும் அவள் ரெண்டு நாளா ராத்திரியில தூக்கம் வராம பொரண்டுப் படுக்க வேண்டிருக்கு. மனசு என்னமோ எதை எதையோ நெனச்சு அல்லாடிக்கிட்டு இருக்கு. என்னா இது? இத்தினி வருசம் கழிச்சு? தாம் அன்னியப்பட்டு போயிட்டமோங்கிறதுபோல ஒரு நெனப்பு மனசப் போட்டு அரிச்சுக்கிட்டு இருக்கு. பத்துநாளா இந்தப்பாடு தான்.

செட்டியார் பண்ணையில வைக்கப்போர் அடிச்சாவது, ஒரே களத்தில நின்னு வேலப் பாக்கிறாப்பல தோதா வாச்சுருக்கு. ஆளுகளயும் நெறயா வச்சுக்கிட்டு செய்யுற வேலயாயும் இல்ல. அவருகிட்ட இருக்கிற நாலு ஜோடி மாடுகளை வச்சுக்கிட்டுத்தான் கடாவடி கட்டணும். கூலிக்கு மாடு அமத்திக்கிட்டு போர் அடிக்கிறதா இருந்தா ஜோடிக்கு எட்டு மரக்கா நெல் வள்ளிசா போவும். அடுத்து அடுத்து இப்ப என்னதான் வேல இருக்கு? உளுந்து பயிறு தானே. மெல்ல நகர்த்துட்டும். நாம கிட்டக்க நின்னு வேலப் பாத்தா கைக்கு ஒண்னும் வந்து சேராது. குத்தவைக்கே கொடுத்துட்டா வந்த வரைக்கும் ஆதாயமா இருக்கும்ங்கிற நெனப்பு தான் செட்டியாருக்கு.

‘முத்தா! நருக்கா நாலு ஆளு வச்சுக்கிட்டு நருவுசா வேலயப் பாரு. மொத்தத்துக்கும் நாலு மூட்ட நெல்லு அளந்துடு. அன்னைய அன்னைய வைக்கல தெரச்சு வண்டி ஏத்தி விட்டடுனும். போனவருஷம் போலவே வைக்கப்போர தண்ணி எறங்கிடாம பக்குவமா போட்டு தலைகூட்டிப்புடுனும். உனக்கு ஒண்ணும் கொறஞ்சிப் போயிடாதுன்னு சொன்னதும் ஒப்புக் கொண்டான். பத்து வருஷமா இப்படித்தான் செய்யிறது. அதில் அவனுக்கு கூலிக்கு மேலத் தேறிப் போயிடும். கம்முன்னு ஒப்புக் கொண்டான்.

அடவா நின்னு வேலப் பாக்கவும் செளரியமா இருக்கும். அடுத்த எடத்துக்குப் போயி நிக்கவேணாம். இப்புடி, பல யோசனையோடத்தான் தன்னோட மவன், மருமவளோட பாக்கியத்தையும் சேத்துக்கிட்டு, வேத்தாளு சேக்காம வேலய ஆரம்பிச்சு வச்சு இன்னிக்கு மூணாம் நாளு.