பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

287


'தங்கச்சி! உன்கூடப் பொறந்தப் பொறப்பா என்னை நெனைச்சுக்க. என்னோட பொண்ணு புள்ளைங்க உன்னை வேத்துக் கலப்பாவா நெனக்குது? சடங்க வையி சபையில் நான் பொண்ணுக்கு மாமனா உக்கார்றேன்' னு சொன்னதோட உட்டுப்புடாமத்தான் சீர் செனத்தி அத்தனையும் செஞ்சிக் காட்டுனான் முத்தண்ணன்.

பாக்கியம் மவளை எழுப்பினதும், புரண்டு படுத்து உடம்பை நெளித்துக் கொண்ட தங்கம், "என்னம்மா" என்று கேட்டுக் கொண்டே கண்ணை கசக்கியபடி எழுந்து உக்காந்தாள்.

"ஒண்ணுமில்லம்மா, நீ படுத்துக்க. இன்னும் செத்த நாழி தூங்கி எழுந்திரி. அப்பதான் கலகலப்பா இருக்கும். ராத்திரி கூட ரொம்ப நேரம் படிச்சிட்டுத் தானே படுத்தே. என்னமோ மனசுல நெனச்சுட்டு எழுப்பிட்டேன். நான் விடிய கருக்கல்ல போயி வேலயப் பாத்தாதான். வெயில்ல நிக்காம ஓதுங்கிக்கலாம். சிவராத்திரியே இன்னும் வர்ல. அதுக்குள்ள வெயில் தலையப் பொளக்குது" என்று மழுப்பியது போலச் சொன்னாலும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டுதான் எழுந்தாள் பாக்கியம். உடம்பு எடம் கொடுக்க மாட்டேன் என்றது. அதுக்காவ எழுந்திரிக்காம் இருக்க முடியுதா?

நிலா மேக்கால சாஞ்சியிருந்தது. பனியும் ரொம்ப தான், இப்பயெல்லாம் தங்கம் அம்மாவுக்கு அதிகம் தொந்தரவு தராமல் தானே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அதனால் பாக்கியம் சுத்துப்பட்ட வேலைகளை மட்டும் பாத்து மாட்டைக் கறந்து பால்காரருக்குக் கொடுத்துவிட்டு தூக்கு வாளியில் பழைய சோத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள். அவள் மவள் தங்கம், பள்ளிக்கூடம் போய் வந்த நேரம் போவ ஆக்கவும், இறக்கவும் வந்தபின் அவளுக்கு வேலை கொறவுதான். இல்லாட்டா, எல்லா வேலையும் பாக்கியமே இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்பட வேண்டி வரும்.

பாக்கியம், அம்பட்டன் முக்கால் களத்துக்குப் போம் போது நிலா மறைஞ்சி, மானம் வெளுக்க ஆரம்பிச்சிருந்தது. பனிச்சாரல் இன்னும் குறைந்தபாடில்லை. கடாவடியில் வாங்கி விட்டிருந்த வக்க பரவலாய் நனைஞ்சிருந்திச்சி. முத்தண்ணனும் அவன் மவனும் ஒரு நாழிக்கு முன்னமேயே போய் இருக்க வேண்டும்.

முத்தண்ணன், கடாவடியில் மாடுகளை நிப்பாட்டி புணைதலில் ஈடுபட்டிருந்தான். அவன் மவன், சுள்ளாப்பாய் இருந்த ஒரு இளங்காளை வயலில் இறங்கி ஓடியதை மறித்துக் கொண்டார ரொம்ப பாடுபட வேண்டியிருந்தது. காளை மீது இருந்த கோபத்தைப் போக்கிக் கொள்ளுவது போல் கையிலிருந்து புளியான் விளாரால் நாலு சொடுக்கு சொடுக்கினான். அந்தக் காளையை