பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

289


பொழங்க முடியாது. அந்தக் களத்துக்காரவங்களுக்கு சங்கடமில்லாம வேணும்ன்னா ஓரமா ஒதுங்கிக்கலாம்.

முத்தண்ணன் மவன், கடாவடியில் இருந்து அவுத்துவிட்ட காளைகளை ஓட்டிப் போய் களத்தில் இறக்கி தண்ணிக் காட்டி நீச்சலடிக்கக் கொண்டு போக விரட்டிக் கொண்டு போனான். கொஞ்சம் பனிப் பதத்தோட பிரிவுடன்னு தெரச்சிப் போட்ட வைக்கல தூக்கிக்கிட்டுப் போயி ஆலமரத்துக் களத்தில் ஒரு ஓரமாய் போட்டு பிரி திரிக்க பூப் போல உதறி விட்டான் முத்தண்ணன்.

பாக்கியம், நெல்லைப் பட்டறைப் போட்டு அது மேல சாணிப் பால் 'குறி' போட கரைச்சு வைச்சுருக்கும் குடத்தை எடுத்துக் கொண்டு போனாள். திருவாசல் குளத்தில் தண்ணி கொண்டு வந்து முத்தண்ணன் பிரிதிரிக்க உதறி விட்டு இருக்கும் வைக்க மீது தெளித்துவிட்டாள். அந்த வைக்கல நல்லா பிசரிவிட்ட முத்தண்ணன் கொஞ்சம் 'தாள்' வைக்கலை எடுத்துத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டான். புடி அளவுக்கு வைக்கலை எடுத்து இடுக்கிக்கொண்டு, குச்சியை அதில் வைத்து பாக்கியத்திடம் கொடுத்தான். 'பிரி'விடுவதில் அவள் புருஷன் வேலுசாமி கெட்டிக்காரன் அவன் நினைவு வந்து அவளைப் பாடாய் படுத்தியதால் பிரியை முறுக்குவதில் கவனம் இல்லாமல் இருந்தாள்.

"தங்கச்சி! பிரிய இழுத்து முறுக்கு, தொய்வா உடாத" அவளை உஷார் படுத்தினான். பனங்கரையில் உள்ள பனை மரத்தில் மாட்டிருக்கும் பானையில் உள்ள கள்ளைக் குடிக்க காக்கைகள் அலைமோதுவதைப் பாத்துக் கொண்டிருந்தபோது அவனோட பேரன் ஓடி வருவதைப் பார்த்தான் முத்தண்ணன்.

"எலே! ஏலே... மொல்ல வாடா. என்னடா இப்புடி தலை தெறிக்க ஓடியார?"

"தாத்தா ஓவ்.... தங்கம் அக்காவோட அப்பா வந்துருக்காங்க. அம்மாதான் சொன்னுச்சு. அவங்க வூட்டுத் திண்ணையில உக்காந்திருக்காங்க. அவங்கதான் அத்தைய கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க."

களத்து மேட்டுக்கு வராமல் வரப்பு தலைமாட்டிலேயே நின்னபடியே கத்திக் கொண்டு ஓடி வந்தான். ஆலமரத்துக் களத்தில் களம் பொழங்கியவர்கள் எல்லார் கவனத்திலும் அவன் சொன்னது நின்றது.

"என்னாடா சொல்ற?"

"ஆமாம் தாத்தா... வெள்ள வேட்டி, சட்டைப் போட்டுக்கிட்டு வந்து உக்காந்துருக்கிறத நானும் பாத்தேன். என்னக் கூப்பிட்டு, "ஒப்பன் பேரு என்ன? டான்னு கேட்டாங்க தாத்தா ..."