பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

சோலை சுந்தரபெருமாள்


பாக்கியத்துக்கு மின்சாரம் தாக்கியது போல இருந்தது. 'பாவி மனுசா பொண்டாட்டி பொண்ணு நெனப்பு இருந்தா ஒருத்திய இழுத்துக்கிட்டுப் போயிருப்பியா? பாவி மவனே. ஒனக்கு என்ன கூப்பிட ஏதுடா உருமை?'

அவள் வாய் திறக்கவில்லை. கை பாட்டுக்கு பிரிக் குச்சியை முறுக்கிக் கொண்டிருந்தது.

கேடும் பொளவையும் கேட்காம வந்து போனப் பயலுக்கு இப்ப பொண்டாட்டி நெனப்பு வந்திருக்கு. அப்பன் பேரு தெரியாம நின்னப் பயலுக்கு இந்தப் பொண்ணக் கட்டி வைக்க தானும் தொணை போயிட்டோமேங்கிற நெனப்பு முத்தண்ணனை ஊசி குத்தலாய் குத்தியது.

"ஏப்பா! வேலுசாமி வந்துருக்கானாம்டா. இப்ப தான் பொண்டாட்டி நெனப்பு வந்துருக்கு. டீக்கடைக் காரவூட்டுக் குட்டியத் தள்ளிக்கிட்டுப் போனான்ல்ல! அந்தச் சேப்பு தோலுக்காரி இப்ப அவனுக்கா வடிச்சுக் கொட்டுறா? ம்... அவ அவன அம்போன்னு விட்டுப்புட்டு ஒரு பாத்திரக்காரனத் தள்ளிக்கிட்டுப் போயிட்டாளாம். அய்யா அதான் பொண்டாட்டிய தேடிகிட்டு வந்திருக்கான். ஒரு நாழி பொடவத் துணியப் பாக்காம இருப்பானா?..."

உடையார் களத்தில் வேலை செய்யும் ஆட்கள் சததம் போட்டே நையாண்டியாய் பேசிக் கொண்டது எல்லார் காதிலும் நல்லாவே விழுந்தது.

முத்தண்ணன் கொஞ்ச நாழி யோசனையில் இருந்துவிட்டு, 'எலே! நீ போய் வந்திருக்கிற அந்த ஆளுகிட்ட சொல்லிப்புட்டேன்னு சொல்லிப்புட்டுப் போடா.'

"என்னா தாத்தா? என்னா தாத்தா... அத்தைய வரச் சொல்லு தாத்தா..." நிமுண்டிக்கிட்டே நின்ற பேரனை அதட்டி அனுப்பி வைத்தான் முத்தண்ணன்.

பாக்கியம் வாய் திறந்து பேசவில்லை. ரொம்பவும் ஜாக்கியாத்தான். இருந்தது. முத்தண்ணன் கைகட்டைவிரல் பாட்டுக்கு வைக்கோலை அளவாய் பிரித்துவிட உள்ளங்கை மேட்டால் பிரியைத் தள்ளி அழுத்தமாகத் திரித்துவிட அவள் ஏற்றிவிடும் முறுக்கால் பிரி கதண்டு போல் நீண்டு கொண்டிருந்தது.

"அந்தி.... சந்தின்னு பாக்காமா கூட எப்பயும் ஓடம்பு ஒடம்புன்னு தெனவு எடுத்து நின்னு தீத்துக்க பாடா படுத்திய மனுசன் இப்ப மட்டும் எதுக்கு வந்து கூப்பிட்டு அனுப்புவான்?"

பிறத்தியார். அவளோடு அவன். அன்னியோன்யமாக இருந்த நேரத்தை சுட்டிக் காட்டுவது போல் பேசிய சொல் அவன் மனசில் வேதனையைக் கிளம்பிவிட்டிருந்தாலும், அது உம்மதானே என்பது போல அவன் முகம் இறுகிக் கிடந்தது.