பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

293


வகையில்லை. பொழுது நல்லாவே எறங்கிக் கொண்டிருந்தது. பொழுதுக்கும் வேர்த்த வேர்வையில் சுருக் சுருக்குன்னு குத்திக் கொண்டிருந்த 'சொணை' அப்போது தான் அடங்கியிருந்தது. குளுகுளுப்பான காத்து வேற... இந்த சுகத்தை அவளால் அனுபவிக்க முடியவில்லை.

கூலி நெல்லு மூட்டையைத் தூக்கிக் கொண்டாள். இத்தனைய நாளை விட இன்னிக்கு கூலியும் மூணு மரக்கா அதிகம். ஒரே கனம். சாம்பான் குறிச்சு வயலில் குறுக்கே இறங்கி நடக்கும் வரை' "ஏம்மா! ஒண்ணும் பேச மாட்டேங்கிற? பேசும்மா பேசு” என்ற நச்சரிப்பாய் தங்கம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சே பசேலேன்னு பாசிப் பயிறும், உளுந்தும் தழைத்துக் கிடந்தன. தை மொதல்ல வெதச்சதுக்கு தோதா மாசி மொதல்ல கணுக்கா மழை. அதில பயிறு மதமதன்னு வளர்ந்து அடம்பா சங்கு வச்சு நின்றது. முந்தா நாளிலிருந்து தென்னக் காத்து வீச ஆரம்பிச்சதும் பூக்க ஆரம்பித்த பூக்கள் இளம் மஞ்சள் நிறமாய், கண்ணுக்கு குளிர்ச்சியாய் தெரிந்தன. தலைக்கு மேலே ஜிவ் ஜிவ் என்று பறக்கும் மடையான்கள் எழுப்பும் ஒலி சன்னமாய் அவள் காதில் விழுந்தது எதுவும் அவளுக்கு சுகப்பட வில்லை.

சாம்பான் குறிச்சு வயலை ரெண்டாய் வகிந்து போட்டது போல கிடக்கும் ஒற்றையடிப் பாதை தலைப்பில் பாக்கியத்தோட புருஷன் வேலுசாமி....

"அம்மா! அதா பாரு. அப்பாவே எதிரக்க வருது பாரும்மா" - தங்கம் பயிர்ச்செடிகளை மிதித்துக் கொண்டு தன் அம்மாவைத் தாண்டி அப்பாவை எதிர்நோக்கி ஓட முயன்றாள். அவனும் கிட்டக்கவே, பத்து தப்படியில்...

"இப்பதான் ஒப்பன கண்டிருக்கியாடி. சரிதான் போடி...” பரபரவென்று மவள் தங்கத்தின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு போனாள். பாக்கியத்தின் மனகக்கு ஒரேயடியாய் தகித்தது.

அவனை அறியாமலேயே ஒத்தையடிப் பாதையிலிருந்து விலகி பாக்கியத்திற்கு வழி விடுவது போல ஒதுங்கி நின்று கொண்டவன், அவள் போகும் திக்கையே... மதாலித்து நிற்கும் பயிர்கள் தென்னலுக்கு வணங்கிக் கொடுத்து அலை அலையாய்...