பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாடக வாத்தியார் தங்கசாமி


நாடக வாத்தியார் தங்கசாமி இந்த பொளப்புக்கு வந்து வள்ளுசா நுப்பது வருசம் ஓடியே போச்சி. அவருக்கு இப்பக்கி வயசு தோராயமா அறுவத்தஞ்ச தாண்டி வச்சிகிட்டாலும் அவுரு நாடாவம் பளக்க வந்ததெல்லாம் அவுரோட பதினஞ்சாவது வயசுல தான். அந்த பதினஞ்சாவது வயசுலயே அவுருக்கு நாடாவ ஞானமெல்லாம் அத்துப் படியாயி போயிருச்சி. அரிச்சந்திராவிலேருந்து ஆரம்பிச்சா ராம நாடாவம்; பவளக்கொடி; வள்ளித் திருமணம்; சத்தியவான் சாவித்திரி; நல்லதங்காள்; நந்தன் சரித்திரம் அப்படின்னு பல நாடாவத்துல கரைகண்டு போயிருந்தாலும், அவுரு தனக்குன்னு மெயினா வச்சிகிட்டதெல்லாம் அரிச்சந்திராவ மட்டும் தான். அந்த நாடாவம்ன்னா அவுருக்கு ரொம்ப இஷ்டம். அவுருக்கு மட்டும்தானா? நாடாவத்துல வேசம் கட்டிகிட்டு நடிக்க வந்த பலபேருக்கு அதுதான் இஷ்டம். அவுரோட பதுநாலாவது வயசுலேருந்து நுப்பத்தஞ்சாவது வயசு வரைக்கும் தமிழ்நாட்டுல சும்மா ஐநூறு நாடாவ மேடையாவது ஏறியிருப்பாருன்னு தான் தோராயமா சொல்லணும். கணக்கெல்லாம் வச்சிகிட்டா அதத்தாண்டிதான்னு வச்சுக்கங்க. அவுரோட பதினாலாவது வயசுல மொத மொதலா உள்ளூரு நாடாவத்துல லோகிதாசனா வேசம் கட்டி ஜனங்களோட பரிதாபத்தையும், பாராட்டையும் வெகுசா பெத்துக் கிட்டதுல 'இன்னாம நாடாவம்தான் நம்ப பொளப்புன்னு' அன்னிக்கி நெஞ்சுல உறுதி எடுத்துக்கிட்டவருதான் இந்த தங்கசாமி. தங்கசாமிக்கு நாடாவம் பழக்கிக் குடுத்தது ஆருங்குறீங்க...? தஞ்சாவூர் ஜில்லா ஊத்துக்காடு மொட்ட வாத்தியாருதான். அந்த மொட்ட வாத்திக்கு பேரெல்லாம் கூட உண்டு. தங்கவேலுன்னு அழகான பேரு. அவுரு வயச ஒத்த மனுசங்க தங்கசாமியோட குருநாதரை தங்கவேலுன்னு கூப்பிட்டு பார்த்ததே இல்ல. 'மொட்ட வாத்தியாரு, மொட்ட வாத்தியாரு'ன்னு தான் கூப்பிட்டு பாத்துருக்காரு இவுரு. தங்கசாமி கூட ஆர்கிட்டயாவது இவுருப் பத்தி பேசிக்கிட்டிருக்கப்ப 'மொட்ட வாத்தியாரு' அப்படின்னு