பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

சோலை சுந்தரபெருமாள்


மறுப்பதற்கு எனக்கு தைரியமில்லை. வாங்கிக் குடித்தேன். சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று.

“தாங்கள் என்ன இரசாயன சாஸ்திரியோ?” என்று கேட்டேன். ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவே எண்ணினேன்.

“என்ன? என்ன? ரசாயானாமா? இல்லை! ஹ!ஹ!ஹ! ர்ரசவாத சாஸ்திரி ர்ரசவாத சாஸ்திரி, ர்ரசவாதம் ர்ரசவாதம், ர்ரசவாதம்.”

கிழவன் பைத்தியக்காரன் என்பது இப்போது நன்கு விளங்கிவிட்டது. திரும்பிப் போவதற்காக ஓர் அடி எடுத்து வைத்தேன். ஆனால் அதற்குள் கிழவன் என் கையைப் பிடித்துக் கொண்டான். ஏதோ பெரிய ரகசியம் சொல்வது போல் அவன் கூறியதாவது.

“தெரியுமா? நான் ஜீவரசம் கண்டு பிடித்திருக்கிறேன்! ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டி ஜீவசத்து! ஆமாம் ஒரு லட்சம் உயிர்கள்! ஓர் உயிருக்கு நூறு வருஷம், லட்சம் உயிருக்கு கோடி வருஷம் கோடி வருஷத்து ஆயுள் இதோ இந்தப் புட்டியில் அடங்கியிருக்கிறது!”

இவ்வாறு சொல்லிக் கிழவன் மேஜையிலிருந்து ஒரு சிறு புட்டியை எடுத்துக் காட்டினார். இந்தப் பைத்தியக்காரனிடமிருந்து எப்படித் தப்பி வெளியே போகப் போகிறோம் என்று எனக்கு ஏக்கம் உண்டாகிவிட்டது.

“நல்லது, ஐயா! ரயிலுக்குப் போகவேண்டும், மோர் கொடுத்தீர்களே, அதற்கேதாவது காசு...” என்று நான் தயங்கினேன்.

“நீ நல்லப் பையன். நான் சொல்கிறதைக் கேளு. ஒரு புட்டி வாங்கிக்கோ, ஜீவசரம் ஒரு லட்சம் உயிர்களின் வடிகட்டிய சத்து, கோடி வருஷ ஆயுசு” என்ற கிழவன் ஜீவரசத்தைப் பற்றி வர்ணித்தான்.

அங்கிருந்து தப்புவதற்கு இது தான் வழியென்று நினைத்தேன். “என்னவிலை?” என்று கேட்டேன்.

“விலை மூன்று ரூபாய். நீ நல்லப் பையன், உனக்கு மட்டும் இரண்டு ரூபாய்.”

ஒரு குவளை மோருக்கு இரண்டு ரூபாய் நல்லப் பேரம். அல்லவா? ஆனால் எனக்கு அப்போதிருந்த மனக் குழப்பத்தில் கையில் இருந்த பத்து ரூபாயையும் கேட்டாலும் கொடுத்து வந்திருப்பேன்.

நான் வெளியே வந்து அந்த வீட்டின் கீழண்டைச் சுவரைப் பார்த்தபோது அதில் “பித்துக் கொள்ளிக் கிழவன்” என்று யாரோ குழந்தைகள் எழுதியிருப்பதைக் கண்டேன். என் நடையின் வேகம் நான் சொல்லாமலே அதிகமாயிற்று. நேரே ரயில்வே