பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

சோலை சுந்தரபெருமாள்


நெனச்சிக்குவா. ஆம்பளப் புள்ளைங்களா ரெண்டு பெத்து அதுங்களுக்கு வேற வயசாயிட்டு வருது. பயலுங்க ஆளாயி மனுசனாயிப் போயித்தா தின்ன வச்சி காப்பாத்தமயா போயிருவானுங் கங்குற நம்பிக்கையில் தான் காலத்த கெடத்திக்கிட்டு கெடக்கா.

தங்கசாமிக்கி மட்டும் குடும்பம் ஒசறனுமே அப்டிங்குற கவலையெல்லாம் இல்லாமயா? இருக்குது...? மனசு எம்புட்டுதான் கூத்துலயும், பாட்டுலயும், குடும்பம் ஒசறனுமே அப்டிங்குறதுலயும் கவல உண்டுதான். எம்புட்டுதான் நாடாவத்துல நடிச்சோ பழக்கிக் குடுத்தோ வருமானம் வந்தாலும், வர்ற காசம்புட்டும் ஏனோ நின்னு தொலைக்கமாட்டேங்குது. வாமடை ஒன்னுருந்தா வடிமடை ஒன்னுருக்குமில்ல. கன்னா புன்னாவா போயிருது. தொயிலுக்கு வந்ததுலேருந்து இன்னிவரைக்கும் முளுசா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம்னு கண்ணாலப் பாத்ததுல்லயே என்னாப் பண்றது? ராசா வேசம் கட்டிகிட்டா ராசாவாருந்ததுர முடியுமா?

‘அரிச்சந்திரன்’ வேசம் கட்டி ‘அரிச்சந்திரன்’னே பேரு பெத்துக்கிட்ட ‘முட்டம் பெரியசாமி’ சொத்து சொவம் சேத்துகிட்டதுல கூட கில்லாடிதான். அவுரு சாவுறப்ப சாவுறதண்டிக்கி முன்னாலேயே பொறந்த ஊர்ல தன் சமாதிய தானே கட்டி முடிச்சிவச்சிபுட்டுதான் செத்தாரு. அவுரு மாறி தானும் வந்துரணும்னுதான் நெனச்சாரு தங்கசாமி. நெனப்பு நடக்குதா? முட்டம் பெரியசாமிக்கு இவரு மட்டும் சோடையா என்னா? அவுரு மாறி கொரல ஒசத்திப் பாடுறதுலயும், வெட்டி நடக்குறதுலயும், ஜாலக்கு பண்றதுலயும் பலே கில்லாடிதான் மனுசன். அரிச்சந்திரா மயான காண்டத்துல, ‘ஆரடி கள்ளி’ன்னு பாடி முடிக்கிறப்ப அண்டம் குலுங்கும். அம்புட்டு பேர் கண்ணுலயும் நீர் வடியும். எம்புட்டுருந்து என்னா பெரோசனம். முட்டம் பெரியசாமிக்கு ஒரு ரேட்டு தங்கசாமிக்கு ஒரு ரேட்டுன்னுல்ல ஆயிப்போச்சி கதி. அட ரேட்டு பேசி அளச்சிக்கிட்டு போற மக்கமனுச பேசுன ரேட்ட ஒழுங்கா குடுத்து கணக்கு தீர்த்ததுண்டா? ஐநூறு பேசி அளச்சிக்கிட்டு போனா முந்நூறு குடுகறதே பெரிய காரியம்தான். வாக்குல ஒன்னு செய்கையில் ஒன்னு. ‘கலைக்கு என்னடா காசு மசுரு’ அப்டின்னு தங்கசாமிதான் தன்னை சமாதானப்படுத்திக்குவாரு.

முட்டம் பெரியசாமின்னா அப்டிவுட்றுவாரா மனுசன்? அவுருக்கு பேசுன ரேட்ட ஒழுங்கா குடுக்காட்டி மறு வருசத்துக்கு நடக்கிறதுக்கு ஒத்துக்க மாட்டாரு. எப்பவும் அவரப் பொறுத்தவரைக்கும் நாக்கு சுத்தமாருக்கணும். நடிப்பும் சுத்தமாருக்கணும். பாடுற பாட்டும் சுத்தமாருக்கணும். ஜனங்க ரசனைக்கு தவுந்தாப்புல ஒருநாளக்கிம் பாட்டுல சினிமா மெட்ட கலக்கவே மாட்டாரு. கலப்புல்லாத பாட்டத்தான் பாடுவாரு.