பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

சோலை சுந்தரபெருமாள்


வராது. குட்டு குட்டா பாடி தீத்துப்புடுவானுவ. அவனுவளுக்கு நாடாவத்துல நடிச்சி பெரியாளா ஆவணும்னு ஒண்ணும் ரோசனையெல்லாம் இல்ல. மாமங்காரன், மச்சாங்காரன் செய்வினையா எதுருபார்த்துதான் இந்தக் காரியமெல்லாம் பண்றது. ஒரோருந்தனும் அழுவுற சீன்ல சிரிப்பானுவ. சிரிக்கிற சீனுல அழுவானுவ. தங்கசாமி வாத்தியாரு எம்புட்டுதான் தலையில அடிச்சிகிட்டு திருத்துனாலும் கொண்டாலும் வேதாளம் முருங்க மரத்துல ஏறிக்கும். என்னமோ பாட்டுப் பாடுறதுல சூரன் மாறி நெனச்சிக்கிட்டு பனங்கள்ளையோ, சாராயத்தையோ ஊத்திக்குவானுவ. அப்பதான் பாட்டு நல்லா எடுப்பா வருமாம். ஊத்திக்கிட்டுதான் பாடுறானுவளே பாட்டுதான் நல்லா வருமா? என்னமோ தேஞ்சுபோன எசத்தட்டு மாறி கொரல் கீச்சு மூச்சுங்கும்.. கேக்றவன்ல்லாம் காரித் துப்பாத கொறையாயிருக்கும். கஷ்ட காலமேன்னு வுட்றுவாரு தங்கசாமி. நாடாவம் நல்ல கட்டத்துல நடந்துகிட்டிருக்கும்.

ராஜா வந்து மந்திரியப்பாத்து, “மந்தீர்... நமது ராஜாங்கத்தில் மாதம் மும்மாரி பொழிகிறதா?” என்று கேட்கவும், கூட்டத்தில் ஒரு கில்லாடிப் பயல், “இதப்போயி மந்திரிகிட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கணுமா ராஜா... நீங்க ஊர்தேசத்துல இருக்குறதில்லையா?"ன்னு பெலக்கமா சத்தங்குடுப்பான். “சும்மா நிறுத்துடா கம்னாட்டி, ஒன்னக் கேக்கலை”ன்னு ராஜா பாய்வாரு. அவனும் பாய்வான். கூட்டத்துல சலசலப்பு. எல்லோரும் எந்திரிச்சி சமாதானம் பண்ணி கூட்டம் அசமடங்கும். ராஜா நடிக்கிறதுக்கு தயங்குவாரு. தங்கசாமி சமாதானப்படுத்தி கூட்டமெல்லாம் குந்தி நாடாவம் தொடரும். மறுவவும் ராஜா மந்திரிகிட்ட கேப்பாரு. “மந்த்ரீ... நமது ராஜாங்கத்துல மாதம் மும்மாரி பொழிகிறதா?” மந்த்ரீ சொல்லுவாரு, “அதுக்கெல்லாம் கொறச்சலில்லை மகாராஜா. மாசம் மும்மாரி பொழிந்து ஜனங்களெல்லாம் சகலவிதமான சௌக்யபௌக்யங்களோடு இருக்கிறார்கள்” அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கப்பதான் ராஜா வேசம் கட்டிக்கிட்டவனோட மாமனோ, மச்சானோ வேகவேகமா ஓடியாருவான் மேடக்கி. கையில வச்சிருக்க மாலையை ராஜா கழுத்தில் போட்டுப்புட்டு சட்டப்பையிலயோ மடியிலயோ வச்சிருக்குற தங்கமோதிரத்தை கைவெரல்ல மாட்டிபுட்டு அவசர அவசரமா தங்கசாமி வாத்தியாரக் கூப்டுவான். அவுரு வர்றாரா... வந்தொடனே சொல்லுவான். “வாத்தியாரய்யா! ஒத்தப்பன மாரியப்பன் மாமன் மொறைன்னு செஞ்சது மாலை ஒன்னு அரப்பவுனு மோதிரம்னு ரேடியாவுல சொல்லிப்புடுவாங்க”ன்னு சொல்லிப்புட்டு அவுரு மைக்குல பேசி சொல்றதட்டும் நின்னு கேட்டுபுட்டு போவான். வாத்தியாரு கோவப்பட்டுக்காம இதெல்லாத்தையும் மெனக்கெட்டுதான் சொல்ல ஆரம்பிப்பாரு.