பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

சோலை சுந்தரபெருமாள்


“ஏண்டா மருதா... உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணுகூடியிருக்கானுவளா...

மூளைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க...”

“சொல்றவிதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க... அதிலும் உங்க சொல்லுக்கு மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா... ஒரு நாள், தாமதிச்சாலும் ஊரே பாழாப் போயிடும்...”

மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது, இருந்தாலும், கண்மூடி யோசித்தார்.

‘இவன் சொல்றபடி ஊரானை கூப்பிட்டு சொன்னாக் கேப்பானுங்க தான். ஆனா நாம முன்னுக்கு நின்னு செய்றப்ப அது இதுன்னு ஆயிரம் ரெண்டாயிரம்னு செலவு வைப்பானுங்க... அப்படி செய்யணும்னு என்ன முடை நமக்கு. எல்லோருக்கும் ஆவறது நமக்கும் ஆயிட்டு போவட்டுமே. இவன் வெறும்பயல். .. எது வேணாணும் சொல்வான். .. நாம ஏமாந்துவிடக்கூடாது...;

மனதின் எண்ண ஓட்டத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தழைந்த குரலில் நெற்றியைத் தேய்த்தபடியே சொன்னார்.

“ஏண்டா மருதா... ஊர்லே எத்தனா பயலுவ இருக்கானுவ... ஆனா உனக்கு வந்த அக்கறை எவனுக்காவது வந்துச்சா... நீ சொல்றபடி செஞ்சாதான் பயிர் பொழைக்கும். சந்தேகமேயில்லை. ஆனா எனக்கொரு சங்கடம். நளைக்காலையிலே ‘பலபல’ன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக. வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில்வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்கு ‘தலை சுத்துறாங்க’ திரும்பி வர மூணு நாளாகும். அதாம் பாக்குறேன்....”

கிழவரின் சாதுரியம் மருதனுக்கு புரிந்துவிட்டது. மனது கசந்து வந்தது.

“பரவாயில்லே பெரியப்பா... நீங்க போயிட்டுவாங்க.” திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான்.

ஊர் எல்லையை மிதித்த போது எதிரில் வந்து கொண்டிருந்த பிரேம்குமாரைப் பார்த்ததும் சரேலென்று உற்சாகம் கொப்பளித்தது மருதனுக்கு.

பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. ‘நாகூர்பிச்சை’ என்று அப்பா, அம்மா வைத்த பெயரை ‘பிரேம்குமார்’ என்று மாற்றிவைத்துக் கொண்டு ‘மன்றம்’ அது இது வென்று என்னவென்னவோ சதா சர்வகாலமும், செய்து கொண்டிருப்பவன்.

19