பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/326

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

சோலை சுந்தரபெருமாள்


“இதைக்குடி. .. சூடா இருக்கு.” குடித்தான். இதமாக இருந்தது.

பிறகு அவள் கேட்காமலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டான்.

அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

“ஏன் மாமா. .. தெரியாமத்தான் கேக்குறேன். .. நீ நட்டுப் போட்டுருக்கிற எந்த நிலம் பாழப் போயிடப் போவுதுன்னு இப்படிக் கன்னத்திலே கை வச்சுக்கிட்டு உக்காந்துகிட்டே... இந்த ஊர்லே இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு 'சக்கரைக்குழி நிலம் கூட இல்லே. எந்த நிலம் எப்படிப் போனா நமக்கென்ன... நமக்குன்னு சொந்தம் கொண்டாட நம்ம கையும் காலும் தான். இந்த ஊரு இல்லேன்னா. ..இன்னொரு ஊரு.. வேலையைப் பாப்பியா...” ஆவேசமாய்க் கொட்டி முழக்கி விட்டு உள்ளே போனாள்.

விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்த மருதனின் முன்னே சோற்றுத்தட்டையும், தண்ணீரையும் வைத்தாள்.

தட்டிலிருந்து கிளம்பி சுடுசோற்றின் வாசம், காரமான மொச்சைக் கொட்டை குழம்பின் நெடி, அவித்த முட்டையின் மணம் எதுவும் அவன் உணரவில்லை.

யந்திரமாய்ச் சாப்பிட்டான். ஊமையாய்ப் படுத்துவிட்டான்.

இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நெல் பயிர் அத்தனையும் ‘என்னைக் காப்பத்து’... என்னைக் காப்பத்து' என்று அவனைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தன.

பொழுது புலரும் தருணம்.

புருஷனைத் தொட கை நீட்டியவள் அவன் இல்லாமல் திடுக்கிட்டு எழுந்தாள். “எங்கே போனாரு...?” யோசித்தவளுக்கு, ‘ஒரு வேளை அங்கே போயிருப்பாரோ.’ என்று பொறிதட்டியது.

முடியை அள்ளிச் சொறுகிக் கொண்டு வடிவாய்க்காலை நோக்கி வேகுவேகென்று நடக்கத் தொடங்கினாள்.

அல்லியின் கணக்குத் தப்பவில்லை. தளும்புகின்ற வடிவாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணீரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக் கிடந்த காட்டாமணக்குச் செடிகளை ‘சரக் சரக்’ கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டாள் அல்லி.